• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க நிறுவனங்களின் பதவியணி மீளாய்வு - 2017
- தற்போது 15 பிரசைகளுக்கு ஒரு அரசாங்க சேவையாளர் என்னும் விகிதாசாரத்தில் இலங்கையின் அரசாங்க சேவையானது விரிவடைந் திருந்தாலும் வருடாந்தம் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதி ஏற்பாடுகளின் மூலம் உரிய குறியிலக்கினை அடைவது மெதுவாக நடைபெறுகின்றதன் காரணமாக அரசாங்க சேவை தொடர்பில் பொதுமக்களிடத்தில் அதிருப்தி காணப்படுகின்றது. அதேபோன்று கிராமிய மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் முக்கியமாக கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் தொழில் புரியும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றதோடு, நகரப் பிரதேசங்களிலும் அதற்கண்மைய பிரதேசங்களிலும் அமைந்துள்ள சில அரசாங்க நிறுவனங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை அங்கீகரிக்கப்பட்ட பதவியணி தேவையையும் விட கூடுதலாகவுள்ளது. ஆரம்ப மட்டத்திற்குரிய பதவியணியானது சிரேட்ட மற்றும் மூன்றாம் நிலைமட்ட பதவியணிக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாகவும் காணப்படுகின்றது.

இதற்கமைவாக, பொதுத்திறைசேரியின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2017‑01‑11 ஆம் திகதியிடப்பட்டதும் 01/2017 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான சுற்றறிக்கையின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படும் தகவல்களின் மீது பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, தேசிய சம்பளங்கள், பதவியணிகள் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு ஆகியவற்றின் பங்களிப்புடன் நிதி அமைச்சினால் அரசாங்க துறைசார்ந்த நிறுவனங்களின் பதவியணி மீளாய்வு செய்யப்படுகின்றதெனவும் இதற்கமைவாக அரசாங்க துறையினதும் மாகாண சபைகளினதும் பதவியணித் தேவை நிர்ணயிக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.