• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறந்த அரசாங்க பங்குடமை - தேசிய செயற்திட்டம்
- வௌிப்படைத் தன்மையை மேம்படுத்துதல், மக்களைப் பலப்படுத்துதல், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், அரசாங்கங்களைப் பலப்படுத்துவதற்கு புதிய தொழினுட்பங்களைப் பயன்படுத்துதல், ஒவ்வொருவரினதும் அனுபவங்களின் ஊடாக கற்றுக் கொள்ளல், நாட்டிலுள்ள சிவில் சமூகத்துடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயலாற்றுதல் போன்றவற்றுக்கு அரசாங்கங்களை ஊக்குவிக்கும் பல்தரப்பு ஆரம்பமொன்றாக "திறந்த அரசாங்க பங்குடமை" 2011 ஆம் ஆண்டில் சர்வதேச மட்டத்தில் முறையாக தாபிக்கப்பட்டதோடு, தற்போது அதில் உறுப்புரிமை பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை சுமார் 70 ஆகும். தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நல்லாட்சி வேலைத் திட்டத்தை மெச்சி இந்தப் பங்குடமையுடன் இணையுமாறு இலங்கைக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் 2015 ஒக்ரோபர் மாதத்தில் மெக்சிக்கோ நகரத்தில் அதன் மாநாட்டில் இலங்கையும் கலந்து கொண்டது. திறந்த அரசாங்க பங்குடமையின் சகல உறுப்புரிமை அரசாங்கங்களினால் இந்த பங்குடமை மூலதத்துவங்களுக்கு அமைவாக நல்லாட்சி, பொறுப்புக்கூறல், வௌிப்படைத்தன்மை, மக்கள் பங்களிப்பு, ஊழலுக்கு எதிராகப் போராடுதல் போன்ற துறைகளுக்கு உரியதாக மூன்று (03) வருட கால தேசிய திட்டமொன்றை தயாரிப்பது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, உரிய தரப்பினர்களின் ஒத்துழைப்புடன் இலங்கையினால் தயாரிக்கப்பட்டுள்ள "திறந்த அரசாங்க பங்குடமை - தேசிய செயற்திட்டம்" ஏற்றுக் கொள்ளப்படுவதற்கும் அதன் செயற்பாடு மற்றும் முன்னேற்றத்தை மேற்பார்வை செய்வதற்கு தேசிய வழிப்படுத்தல் குழுவொன்றைத் தாபிப்பதற்குமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த பிரேரிப்புக்கு அமைவாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினதும் மாண்புமிகு பிரதம அமைச்சர் அவர்களினதும் தலைமையில் இயைபுள்ள அமைச்சர்களையும் தரப்பினர்களையும் கொண்ட வழிப்படுத்தல் குழுவொன்றைத் தாபிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.