• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிகரட் மற்றும் புகையிலை உற்பத்திகளின் மீது விதிக்கப்பட்டுள்ள வரியைத் திருத்துதல்
- இலங்கையில் 18 வயதிற்கும் 69 வயதிற்கும் இடைப்பட்டோர்களில் 15 சதவீதமானோர் புகைபிடிக்கின்றவர்கள் என அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதோடு, புகையிலை சார்ந்த நோய்களினால் வருடாந்தம் நிகழும் மரணங்களின் எண்ணிக்கை சுமார் 30,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. புகையிலை பாவனையினால் உருவாகும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வருடாந்தம் சுமார் 72 பில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு செலவாகின்றதெனவும் கணக்கிடப்பட்டுள்ளது. “வரிவிதித்தல்" புகையிலை மற்றும் சிகரட் பாவனையை வரையறுக்கும் வெற்றிகரமான வழிமுறை யொன்றாக உலக சுகாதார அமைப்பினால் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமை வாக சிகரட் மற்றும் புகையிலை உற்பத்தியின் மீது விதிக்கப்பட்டுள்ள வரியைத் திருத்துவதற்காக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்பு தொடர்பில் பரிசீலனை செய்யும் பொருட்டு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 15 சதவீதமான பெறுமதிசேர்க்கப்ப்ட வரியை (VAT) சிகரட்டுகளுக்காக மீண்டும் விதிப்பதற்கும் தற்போது நடைமுறையிலுள்ள உற்பத்தி வரியை எந்த அளவிலான சிகரட் ஒன்றுக்கும் 5 ரூபாவால் அதிகரிப்பதற்கும் பீடிக்கான இலை இறக்குமதி செய்யும் போது கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்படும் இறக்குமதி செஸ்வரியை 2,000/- ரூபாவிலிருந்து 3,000/- ரூபாவரை அதிகரிப்பதற்கும் இதற்கு மேலதிகமாக வேறு நடவடிக்கைகளை பின்பற்றி நாட்டில் புகையிலை பாவனையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.