• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உராய்வுநீக்கி கைத்தொழிலை தாராளமயப்படுத்துதல்
- தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இலங்கை இந்திய எண்ணெய் கம்பனி அடங்கலாக 13 நிறுவனங்கள் இலங்கையில் உராய்வுநீக்கி கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளன. ஆயினும், உராய்வுநீக்கி கைத்தொழிலில் ஈடுபடுவதற்கு புதிய உரிமப்பத்திரங்கள் வழங்கப்படாமை, 2006 ஆம் ஆண்டிலிருந்து அரையாண்டு பதிவு மற்றும் உரிமப்பத்திர கட்டணங்கள் திருத்தப்படாமை சுயாதீன ஒழுங்குறுத்துநர் ஒருவர் இல்லாமை போன்ற பிரச்சினைகள் காரணமாக இலங்கைக்கு உராய்வுநீக்கி கைத்தொழில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொள்வதற்கு முடியாமற் போயுள்ளது. இதற்கமைவாக, இலங்கையில் உராய்வுநீக்கி சந்தையில் பயனுள்ள போட்டிகரமான நிலையொன்றுக்கு வசதிகளை ஏற்பாடு செய்யும் நோக்கில் முன்வைக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்குரியதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விஞ்ஞாபனத்திலுள்ள பின்வரும் பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

(i) உராய்வுநீக்கி கைத்தொழிலுக்கு புதிதாக நுழைவதற்கு விரும்பும் ஒருவருக்கு உரிமப்பத்திரம் வழங்கும் பொருட்டு பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் ஊடாக விண்ணப்பங்கள் கோருதல்;

(ii) அரையாண்டு ரீதியில் செலுத்த வேண்டிய நிலையான பதிவு / உரிமப்பத்திர கட்டணத்தை ஒரு மில்லியன் ரூபாவிலிருந்து இரண்டு மில்லியன் ரூபாவரையும் பதிவு செய்வதற்கான உச்ச கட்டணத்தை ஐந்து மில்லியன் ரூபாவிலிருந்து ஆறு மில்லியன் ரூபா வரையும் உடனடியாக செயல்வலுக்கு வரத்தக்கதாக திருத்துதல்;

(iii) இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் கலக்கப்படும் உராய்வுநீக்கிகளுக்கு தேசிய மட்ட தரச் சான்றிதழ்களை வழங்குமாறு இலங்கை கட்டளைகள் நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்குதல்;

(iv) உராய்வுநீக்கி கைத்தொழிலின் ஒழுங்குறுத்துநராக செயலாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அதிகாரத்தை கையளித்தல்;

(v) உராய்வுநீக்கி உற்பத்திகளை உயர் தரத்தில் பொதுமக்களுக்குத் வழங்குவதற்குத் தேவையான சட்டங்களை அமுல்படுத்துமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்குதல்;

(vi) பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்படும் வழிகாட்டல்களை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கும் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கும் ஆலோசனை வழங்குதல்.