• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுக நகர கருத்திட்டம் - உத்தேச நிதி நகரக் கருத்திட்டம் - 2014 செப்ரெம்பர் மாதம் செய்து கொள்ளப்பட்ட மூல உடன்படிக்கைக்கு பிரேரிக்கப்படும் திருத்தங்கள்
- 2014 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட மூல உடன்படிக்கையில் சேர்க்கப்பட வேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கான பொழிப்பு இங்கு கீழ்க் காட்டப்பட்டுள்ளது.

சொந்தக்காணி

* கடந்த அரசாங்கத்தினால் 2014 செப்ரெம்பர் மாதம் செய்து கொள்ளப்பட்ட மூல உடன்படிக்கையின் பிரகாரம் C.H.E.C. PORT CITY (Pvt.) Ltd., கம்பனிக்கு (கருத்திட்டக் கம்பனி) 20 ஹெக்டயார்கள் கொண்ட பூமி பிரதேசத்தை உரித்து அடிப்படையில் வழங்கப்படுவதோடு, மீதி காணியானது 99 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்கப்படும்.

* புதிய அரசாங்கத்தினால் கலந்துரையாடப்பட்ட புதிய உடன்படிக்கைக்கு அமைவாக உரித்துடையதாக காணி எதுவும் வழங்கப்படாததோடு, கருத்திட்டக் கம்பனிக்கு வழங்கப்படும் காணிகள் யாவும் 99 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்கப்படும். இந்த 20 ஹெக்டயார்கள் காணி அரசாங்கத்திற்குத் தேவைப்படவில்லையாயின் மேலும் 99 வருடகாலம் குத்தகைக்கு எடுப்பதற்கு கருத்திட்டக் கம்பனிக்கு முடியும்.

இலங்கைத் துறைமுக அதிகாரசபையினதும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினதும் வகிபாகம்

* கடந்த அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட மூல உடன்படிக்கைக்கு அமைவாக அதன் சொந்த பயன்பாட்டிற்கும் அபிவிருத்தி நோக்கங்களுக்காகவும் கருத்திட்டக் கம்பனியிடமிருந்து 62 ஹெக்டயார்கள் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைத் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபைக்கு இயலுமாகும் வகையில் இலங்கைத் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தைத் திருத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சட்டத்தின் 6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இது இலங்கைத் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையின் நோக்கங்களுக்கு வரையறுக்கப்படும். நிலையான சொத்துக்களின் அபிவிருத்திக்காக இலங்கைக் காணிகளை பயன்படுத்த முடியுமென முன்னைய அரசாங்கத்தினால் கூறப்பட்ட போதிலும் 6 ஆம் பந்தியின் கீழ் அத்தகைய அதிகாரக் கையளிப்பு குறிப்பிடப்படவில்லை.

* புதிய உடன்படிக்கையின் கீழ் இலங்கைத் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையினால் நிலையான சொத்துக்கள் அபிவிருத்தியின் பொருட்டு பொறுப்பேற்கப்படாததோடு, நடைமுறையிலுள்ள இலங்கைத் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் அதிகாரம் கிடைக்கப் பெற்றுள்ள செயற்பாடுகளுக்கு மாத்திரம் அதன் பொறுப்பு வரையறுக்கப்படும். ஆதலால், நிரப்பப்படும் காணிகள் கையளிக்கப்பட வேண்டிய மிகப் பொருத்தமான நிறுவனம் நகர அபிவிருத்தி அதிகாரசபையென தீர்மானிக்கப்பட்டது.

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வகிபாகம்

* இலங்கைத் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தைத் திருத்துதல் அடங்கலாக அரசாங்கத்தின் பொறுப்புகளை நிறைவேற்றும் பொறுப்பானது புதிய உடன்படிக்கையின் கீழ் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சுக்குக் கையளிக்கப்படும்.

* முன்னைய அரசாங்கத்தினால் 2014 செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்குப் பதிலாக புதிய முத்தரப்பு உடன்படிக்கையொன்றை மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கும் (அரசாங்கத்தின் சார்பில்) நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கும் கருத்திட்டக் கம்பனிக்கும் இடையில் கைச்சாத்திடப்படும்.

நிரப்புவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காணிகளின் சட்டத்தன்மை

முன்னைய அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட மூல உடன்படிக்கையின் கீழ் நிரப்பப்படும் காணிகளின் நிலைமை தௌிவற்றதாகும். இந்த காணி கொழும்பு மாவட்டத்தின் பகுதியொன்றல்ல. ஆதலால், அரசியலமைப்பின் 5 ஆம் உறுப்புரைக்கு அமைவாக இலங்கையின் ஆள்புலப் பிரதேசமொன்றாக இந்த நிலப்பிரதேசம் கருதப்படமாட்டாது. புதிய சட்டத்தின் கீழ் பூமி பிரதேசமானது கொழும்பு நிருவாக மாவட்டத்தின் பகுதியொன்றாக ஆக்கப்படுவதோடு, அது கொழும்பு மாநகர சபைக்கு புறம்பாக, உத்தேச நிதி நகர கூட்டத்தாபனத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

* மூல உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கைத் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையினால் கருத்திட்டக் கம்பனிக்கு காணி குத்தகைக்களிப்பதற்குரியதாக பிரதான குத்தகைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்.

* புதிய உடன்படிக்கையின் கீழ் நிரப்பப்படும் காணிகள் யாவும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் பிரசுரித்து, அதன் பின்னர் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு குறித்தொதுக்கப்படுவதோடு, அந்தச் சந்தர்ப்பத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் அபிவிருத்திப் பிரதேசமொன்றாகப் பிரகடனப்படுத்தப்படும். இது மேற்குறிப்பிடப் பட்டுள்ளவாறு 99 வருடகால குத்தகை அடிப்படையில் கருத்திட்டக் கம்பனிக்கு காணி குத்தகைக்களிக்கப்படுவதற்கு முன்னராகும்.

கடற்றொழிலாளர்களின் வருமானத்திற்கு உதவும் நிகழ்ச்சித்திட்டம்

* மூல உடன்படிக்கைக்கு அமைவாக கடற்றொழிலாளர்களின் வருமானத்திற்கு உதவும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு நிதியளிக்கும் பொறுப்பு இலங்கைத் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபைக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இலங்கைத் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னைய நிருவாகமானது அத்தகைய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவில்லை.

* புதிய உடன்படிக்கையின் கீழ் கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சுடன் உசாவுதலைச் செய்து மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் கடற்றொழிலாளர்களின் வருமானத்திற்கு உதவும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு 500 மில்லியன் ரூபாவை கருத்திட்டக் கம்பனியினால் ஒதுக்குவதற்கும்.

பயன்பாடுகளும் போக்குவரத்து உட்கட்டமைப்பு கட்டமைப்புகளும்

* மூல உடன்படிக்கையின் கீழ் நிரப்பப்படும் காணிகளில் வீதிகள் மற்றும் பயன்பாடுகளின் சகல முதலீடுகளும் கருத்திட்டக் கம்பனியினட பொறுப்பாக இருந்ததோடு, கருத்திட்ட பூமியின் முனைவிடம் வரை சகல பயன்பாடுகளினதும் வீதி உட்கட்டமைப்புகளினதும் நிறுவுகை இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

* புதிய உடன்படிக்கையின் கீழ் கருத்திட்ட பூமியின் முனைவிடம் வரை சகல பயன்பாடுகளினதும் வீதி உட்கட்டமைப்புகளினதும் நிறுவுகையின் பாலான இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு தளர்த்தப்படவுள்ளது. இதற்கான நீண்டகாலத் தீர்வொன்றாக கருத்திட்டக் கம்பனியூடாக அரசாங்க - தனியார் கூட்டு தொழில்முயற்சியொன்றை ஆரம்பிக்கும் சாத்தியம் பற்றி மதிப்பீடு செய்யப்படவுள்ளது.

நிரப்பப்பட்ட காணிகளின் முகாமைத்துவமும் பாராமரிப்பும்

* மூல உடன்படிக்கையின் கீழ் 100 சதவீதம் இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலையான சொத்துக்கள் முகாமைத்துவக் கம்பனியொன்றினால் முதலீட்டாளர்களிடம் இருந்து முகாமைத்துவக் கட்டணங்களை அறவிட்டு துறைமுக நகர பொது பூமி பிரதேசத்தின் முகாமைத்துவம், பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் போன்றன செய்யப்படவுள்ளது. ஆயினும், குறித்த சொத்து முகாமைத்துவக் கம்பனியானது சுய நிலைபேறான தன்மையை அடையும் வரை அதன் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்காக நிதி வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கோ அல்லது இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபைக்கோ நேரிடும்.

* அத்தகைய தொழில்முயற்சிக்கு நிதியிடும் அரசாங்கத்தின் பொறுப்பினைத் தளர்த்துவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சொத்துக்கள் முகாமைத்துவக் கம்பனியொன்றைத் தாபிப்பதற்கும் தொழிற்படுத்துவது தொடர்பிலும் பரிசீலனை செய்வதற்கு புதிய உடன்படிக்கையின் கீழ் கருத்திட்டக் கம்பனியானது உடன்பாடு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் அபிவிருத்தியின் மீது செய்யப்பட்டுள்ள வரையறைகள்

* காணி நிரப்பப்பட்டு மூன்று (03) வருடகாலப் பகுதிக்குள் இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளில் நடைமுறைப்படுத்தக்கூடிய அபிவிருத்தி செயற்பாடுகள் கல்வி மற்றும் கலாசாரப் பணிகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்படுவதற்கு மூல உடன்படிக்கையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

* ஆயினும், சுகாதார சிகிச்சை நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகள், கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையங்கள் உட்பட புதிய கொழும்பு சர்வதேச நிதி நிலையமும்கூட இந்தக் காணிகளில் தாபிக்கக்கூடியவாறு மேற்கூறப்பட்ட வரையறைகளை நீடிப்பதற்கு புதிய உடன்படிக்கையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதேபோன்று கொழும்புத் துறைமுகத்தின் வடக்கு மற்றும் மேற்கு கப்பல் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வது சம்பந்தமான வரையறைகள் விதிக்கப்படமாட்டாது. இவற்றுக்கு மேலதிகமாக ஆரம்பத்தில் நிரப்பப்பட்ட காணியில் புதிய கொழும்பு சர்வதேச நிதி நிலையத்தைத் தாபிப்பதற்கும் நிரப்பப்பட்ட காணிகளில் கட்டடங்களை நிருமாணிப்பதற்கான திறன்சாத்திய தகவாய்வு உறுதிசெய்யப்பட்டவுடனும் சாத்திய தகவாய்வொன்றின் பின்னரும் இலங்கை அரசாங்கம் உடன்படும் அத்துடன் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளப்படும் நிபந்தனைகளின் மீது புதிய முதலீடொன்றை செய்வதற்கும் கருத்திட்டக் கம்பனியானது உடன்பாடு தெரிவித்துள்ளது.

நட்டஈட்டுக் கோரிக்கை

* தேவையான சுற்றாடல் இசைவாக்கங்களை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னைய நிருவாகத்திற்கு இயலாமற் போனதன் காரணமாக கருத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதன் விளைவாக ஏற்கவேண்டி நேரிட்ட இழப்புகளை அறவிடுவதற்காக முன்வைக்கப்பட்ட நட்டஈட்டுக் கோரிக்கையானது அதிமேதகைய சனாதிபதி அவர்களினதும் மாண்புமிகு பிரதம அமைச்சர் அவர்களினதும் சீனாவிற்கான விஜயங்களின் போது உருவான நல்லெண்ணத்தின் மீது மீளப் பெறுவதற்கு கருத்திட்டக் கம்பனியானது உடன்பட்டுள்ளது.

* கருத்திட்டத்தின் இடைநிறுத்துகை, மீள ஆரம்பித்தல், பொருட்கள் வீணாதல், பொது தொழிற்படு செலவுகள் மற்றும் வங்கி நிதியிடல் செலவு என்பனவற்றின் கீழ் கருத்திட்டக் கம்பனிக்கு ஏற்கவேண்டி நேரிட்டுள்ள இழப்புகளைக் குறைப்பதற்காக நிரப்பப்படவுள்ள காணியின் அளவினை அதிகரிக்காமலும் 62 ஹெக்டயார்களுக்கான இலங்கை அரசாங்கத்தின் உரிமையை குறைக்காமலும் தங்களுக்குரிய அளவினைவிட மேலதிகமாக விற்கக்கூடிய சுமார் 2 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணியைப் பெற்றுத் தருமாறு கருத்திட்டக் கம்பனியினால் செய்யப்பட்டுள்ள பிரேரிப்புக்கு இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இது நிறைவேற்றப்பட்டது இரவு மோட்டார் ஓட்டப்போட்டிகளுக்கான ஓட்டப்பாதை போன்ற அத்தியாவசியமற்ற கருத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளிலிருந்தாகும்.

* துறைமுக நகரத்தின்பால் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட பொது காணியின் அளவை (பொது மக்களினால் உபயோகப்படுத்தப்படும் பூங்கா, வீதி, நடைபாதை போன்றவை) விஞ்சி 28 ஹெக்டயார்களால் அதிகரிப்பதற்கு நடப்பாண்டில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்பட்ட புதிய பாரிய திட்டத்திற்குள் கருத்திட்டக் கம்பனியான உடன்பாடு தெரிவித்துள்ளது. உதாரணமாக நிருமாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் 45 ஹெக்டயார்கள் கொண்ட பூங்காவும் 13 ஹெக்டயார் செயற்கை கடற்கரையும் (பொது மக்களின் பாவனைக்காக காலி முகத்திடலிலுள்ள 5.7 ஹெக்டயார்களுக்கு சமமாக) துறைமுக நகரத்தில் நிருமாணிக்கப்பட உள்ளது

சுற்றாடல் இசைவாக்க அங்கீகாரங்கள்

* மூல உடன்படிக்கையின் கீழ் கருத்திட்டத்திற்காக பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய அத்தகைய சகல சுற்றாடல் சார்ந்த அங்கீகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிதியிடுதல் இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பாக இருந்தது. இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னைய நிருவாகத்தினால் பெறப்பட்ட சுற்றாடல் சார்ந்த அங்கீகாரங்களில் பல்வேறுபட்ட குறைபாடுகள் காணப்பட்டன.

* அத்தகைய குறைபாடுகளை சீர் செய்து கொள்வதற்காக கருத்திட்டக் கம்பனியினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு உட்பட நிதியிடுதலுடன் விரிவான புதிய சுற்றாடல் தாக்கங்கள் பற்றிய பூரண மதிப்பீடொன்றை செய்வதற்கு 2015 ஆம் ஆண்டில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றாடல் சார்ந்த நிபந்தனைகள்

* 2011 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆரம்ப சுற்றாடல் சார்ந்த தாக்கங்கள் தொடர்பிலான மதிப்பீட்டின் கீழ் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அதன் சுய அபிவிருத்தி உரிமப்பத்திரத்தில் 42 நிபந்தனைகளை விதித்திருந்தது.

* நிரப்பப்படும் 269 ஹெக்டயார் காணி சார்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் செய்யப்பட்டதும் 2015 ஆம் ஆண்டில் பொது மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக பிரசித்தப்படுத்தப்பட்டதுமான புதிய குறைநிரப்பு சுற்றாடல் சார்ந்த தாக்கங்களை மதிப்பீடு செய்வதன் கீழ், சுற்றாடல் தாக்கங்களைக் குறைப்பதற்கான 70 நிபந்தனைகள் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய அபிவிருத்தி உரிமப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நிலைமை மாற்றம்

* முன்னைய நிருவாகத்தினால் இந்தக் கருத்திட்டமானது அசையா சொத்துக்களின் அபிவிருத்தி, இரவு மோட்டார் ஓட்டப் போட்டி அடங்கலாக விளையாட்டுக்கள், கல்வி மற்றும் கலாசார அபிவிருத்திக்கான காணிகளை நிரப்பும் கருத்திட்டமொன்றாக கவனத்திற்கு எடுக்கப்பட்டது, ஆதலால், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அசையா சொத்துக்களின் அபிவிருத்திக்காக குறித்த காணி அளவிலிருந்து கூடுதலான பகுதியை பயன்படுத்துவதற்கு இயலாத நிலைமை எழுந்திருந்தது.

* சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு நிதி நகரமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு இந்த பூமி பிரதேசம் பயன்படுத்தப்படுமென சீன அரசாங்கத்துடன் தற்போது உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் கரைக்கப்பாலான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்புக் கிடைக்கப்பெறும். இதற்காக, துபாயில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளவாறு கரைக்கப்பாலான செயற்பாடுகளின் கட்டுப்பாட்டுக்குத் தேவையான புதிய சட்டங்கள் அரசாங்கத்தினால் பிரேரிக்கப்படும். இந்த நிதி நகரம் இலங்கையின் பிரதான வருமானம் ஈட்டும் வழியொன்றாகவும் அதேபோன்று தொழில் வாய்புகளைப் பிறப்பிக்கும் வழியாகவும் அமையுமென்பதில் ஐயமில்லை.