• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள்
- பொருட்களைக் கொண்டு செல்லும் செலவு மற்றும் தரகர்களின் எண்ணிக்கை என்பவற்றின் மீது அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை மாவட்டத்திற்கு மாவட்டம் கணிசமான விதத்தில் மாற்றமடைவது பொதுவாக நிகழுகின்ற போதிலும் அண்மையில் செய்யப்பட்ட வற்வரி அதிகரிப்புக் காரணமாக இந்த நிலைமை எழுந்துள்ளதாக நுகர்வோர்களிடத்தில் கருத்து நிலவுகின்றது. சில நுகர்வுப் பொருட்களுக்கு வற்வரி ஏற்புடையதானபோதிலும் அரிசி, சீனி, பருப்பு, பெரியவெங்காயம், கிழங்கு, சின்னவெங்காயம், பால்மா, கோதுமைமா, செத்தல்மிளகாய், பயறு, கௌப்பி, ரின்மீன், கோழி இறைச்சி, நெத்தலிக் கருவாடு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் மருந்துகளுக்கும் வற்வரி ஏற்புடையதாகாது. அதேபோன்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சதொச விற்பனை நிலையகள் ஊடாக விற்பனை செய்யும் விலைகளைவிட மிக்க கூடுதலான விலைக்கு வர்த்தகர்கள் விற்பனை செய்கின்றமை தெரியவந்துள்ளது. இந்த நிலைமைக்கு மாற்றுவழியாக 15 அத்தியாவசிய உணவுப் பொருட்களை இனங்கண்டு நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் வர்த்தமானி மூலம் வௌிப்படுத்துவதற்கும் இந்த உணவுப் பொருட்களின் ஆகக்கூடிய சில்லறை விலைகளை வாழக்கை செலவுபற்றிய அமைச்சரவை உபகுழுவினால் தீர்மானிப்பதற்கும் இதற்கமைவாக இந்த கட்டுப்பாட்டு விலைகளின் நடைமுறைப்படுத்தலை ஒருங்கிணைப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபைக்கு 200 பட்டதாரி பயிலுநர்களினதும் தேவையான சந்தர்ப்பங்களில் பாதுகாப்புத்துறை உத்தியோகத்தர்களினதும் சேவையை பெற்றுக் கொள்வதற்குமாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.