• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீண்டகாலமாக உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளவர்களை வடக்கு மாகாணத்தில் மீளக் குடியமர்த்துதல்
- மோதல்நிலைமை காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்தலானது 1980 இலிருந்து இலங்கையில் காணக்கிடைத்த நிகழ்வொன்றாகுமென்பதோடு, இதன் காரணமாக வட மாகாணத்தில் வசித்த தமிழ் மக்களைப் போல சிங்களம் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் பலவும் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளன. இந்த மோதல்நிலைமை முடிவடைந்ததன் பின்னர், இவ்வாறு நீண்டகாலமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்கள் மீண்டும் அவர்களுடைய ஆரம்ப வசிப்பிடத்திற்கு செல்ல ஆரம்பித்தாலும் அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமாக அவர்களை முறையாக மீளக் குடியமர்த்தும் சாத்தியம் கிடைக்கவில்லை. நீண்ட காலமாக இடம்பெயர்ந்து மீள வருகைதருபவர்களின் வீட்டுத் தேவைகளானது முஸ்லிம் குடும்பங்களுக்கு 16,120 வீடுகளும் சிங்களக் குடும்பங்களுக்கு 5,543 வீடுகளும் என இனங்காணப்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளதன் காரணமாக வாக்குரிமை உட்பட அவர்களுடைய அரசியல் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, பிறப்பு மற்றும் மரணப் பதிவின் போதும் அதேபோன்று பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் போதும் பிரதேச செயலகம் அடங்கலாக ஏனைய அரசாங்க நிறுவனங்களினால் வழங்கப்படும் வசதிகளைப் பெற்றுக் கொள்வதிலும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியநிலை அவர்களுக்கு உருவாகியுள்ளது. இதற்கமைவாக, நீண்டகாலமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்களை வடக்கு மாகாணத்தில் மீளக் குடியமர்த்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் அதன்போது அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் பொருட்டும் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சரினதும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினதும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரினதும் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் உரிய மாகாண தலைமை உத்தியோகத்தர்களினதும் சிரேட்ட உத்தியோகத்தர்களினதும் உள்ளடக்கிய செயலணியொன்றை நியமித்து அதன் சிபாரிசுகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.