• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழினுட்ப விஞ்ஞானத்திற்கான ஆசிய நிறுவனத்தை தாபித்தல்
- கல்வி பொதுத் தராதர (உயர்தர) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவது அண்ணளவாக 22 சதவீதமானோர் என்பதனால் உயர் கல்வி வாய்ப்புகளை எதிர்பார்த்து பெருமளவிலான மாணவர்கள் வருடாந்தம் வௌிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆயினும், இவர்களுள் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்புவதில்லை. இந்த பின்னணியில் இலங்கை மாணவர்களுக்கும் அதேபோன்று வௌிநாட்டு மாணவர்களுக்கும் கல்வி வாய்ப்பினை வழங்கி அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய உயர்கல்வி நிறுவனமொன்றை தொழினுட்ப விஞ்ஞானத்திற்கான ஆசிய நிறுவனம் (Asia Institute for Science of Technology - AIST) என்னும் பெயரில் அரசாங்க மற்றும் தனியார்துறை முதலீடொன்றாகத் தாபிப்பதற்கு கருதப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னுரிமை அபிவிருத்தி பங்காளர் ஒருவரான யப்பான் இந்தக் கருத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளது. AIST நிறுவனம் சார்ந்த 2025 ஆம் ஆண்டளவில் "தொழினுட்ப கிராமமொன்று" தாபிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, யப்பான் தொழினுட்ப பங்குதாரர்களுக்கு அவர்களுடைய உற்பத்திகள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களை அங்கு தாபித்துக் கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும். நனோ (NANO) தொழினுட்பம், மின்சாரம் மற்றும் மின்னனு விஞ்ஞானம், தகவல் தொலைத்தொடர்பாடல் தொழினுட்பம், தொடர்பாடல், றொபோ விஞ்ஞானம் போன்ற துறைகள் அடங்கலாக தொழினுட்ப துறைசார்ந்த தொழில் சந்தைக்குள் நுழையக்கூடிய விதத்தில் இங்கு மாணவ மாணவிகளுக்கு விசேட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். மேல் மாகாண மாநகர கருத்திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்படவுள்ள விஞ்ஞான மற்றும் தொழினுட்ப நகரத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள மாலம்பே பிரதேசத்தில் அண்ணளவாக 100 ஏக்கர் நிலப்பிரதேசத்தில் உத்தேச தொழினுட்ப விஞ்ஞானத்திற்கான ஆசிய நிறுவனத்தை (AIST) தாபிப்பதற்கும் யப்பான் அரசாங்கம் அடங்கலாக ஏனைய பிரதான நிறுவனங்களிடமிருந்து உரிய தொழினுட்ப மற்றும் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.