• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை மீளமைத்தல்
- "எயார் சிலோன் லிமிட்டெட்" என்னும் பெயரில் 1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் தாபிக்கப்பட்ட ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையானது அதன் பின்னர் 1979 ஆம் ஆண்டில் பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக "எயார் லங்கா லிமிட்டெட்" என்னும் பெயரில் தாபிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் எமிரேட்ஸ் விமானக் கம்பனியுடன் செய்து கொள்ளப்பட்ட 10 வருடகால முகாமைத்துவ உடன்படிக்கைக்கு அமைவாக எயார் லங்கா லிமிட்டெட் விமானக் கம்பனியின் பங்குகளிலிருந்து 40 சதவீதம் இந்தக் கம்பனிக்கு உடைமையாக்கப்பட்டதோடு, இந்த காலப்பகுதியில் "எயார் லங்கா" நிறுவனமானது "ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ்" என மீளப் பெயரிடப்பட்டது. எமிரேட்ஸ் விமானக் கம்பனியினால் முகாமிக்கப்பட்ட 1998-2008 காலப் பகுதிக்குள் இலாபம் ஈட்டி அரசாங்கத்திற்கு வரி செலுத்தி இந்த நிறுவனமானது செயற்பட்டது. அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் தொழிற்பாட்டுப் பணிகள் மீண்டும் அரசாங்கத்திற்கு உடைமையாக்கப்பட்டதோடு, முறையற்ற முகாமைத்துவம் உட்பட பல்வேறுபட்ட காரணங்களினால் தொடர்ச்சியாக நட்டநிலையில் இயங்கியது. நிதி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மதிப்பீட்டிற்கு அமைவாக 2015‑12‑31 ஆம் திகதியன்றுக்கு "ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ்" நிறுவனத்தின் மொத்த பொறுப்புக்களின் அளவு சுமார் 461 பில்லியன் ரூபாவாகும். இலங்கை விமான சேவையானது தற்போது முகம் கொடுத்துள்ள நிதி பிரச்சினையிலிருந்து விடுவித்துக் கொண்டு அதனை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அதன் தொழிற்பாட்டுப் பணிகளை கையளிப்பதற்கு பொருத்தமான தரப்பொன்றை இணைத்துக் கொள்ளவேண்டியுள்ளது. அவ்வாறு செய்யக்கூடிய விதத்தில் "ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ்" விமானக் கம்பனியின் சகல பொறுப்புக்களையும் இலங்கை அரசாங்கத்தினால் பொறுப்பேற்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.