• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
16 ஆவது உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டை இலங்கையின் அனுசரணையில் நடாத்துதல் - 2016 ஒக்ரோபர் 12,13
- ஐக்கிய நாடுகள் அமைப்பினதும் உலக வர்த்தக அமைப்பினதும் முகவர் நிறுவனமொன்றான சர்வதேச வர்த்தக மையத்தின் முன்னுரிமை வருடாந்த நிகழ்ச்சித்திட்டமானது வருடாந்தம் நடாத்தப்படும் உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடாகும். இது உலகம் பூராவுமுள்ள சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்புடைய சகல தரப்பினர்களினதும் பங்களிப்புடன் நடாத்தப்படும். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையும் சர்வதேச வர்த்தக மையமும் இணைந்து 16 ஆவது உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டை “வர்த்தக வெற்றி: இணைதல், போட்டியிடுதல், மாற்றம்" என்னும் தொனிப்பொருளின் கீழ் 2016 ஒக்ரோபர் மாதம் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்துவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்தின்பால் இந்த நாட்டிலுள்ள திறந்தநிலை மற்றும் இதற்காக நிலவும் சாதகமான வியாபாரசூழல் என்பவற்றை எடுத்துக்காட்டுவதற்கு இந்த மாநாடு அதன் பங்களிப்பை நல்கும். இதற்கமைவாக, சர்வதேச வர்த்தக மையத்தின் நிதிப் பங்களிப்புடன் 2016 உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டின் அனுசரணையை இலங்கை வகிப்பதற்காக சர்வதேச வர்த்தக மையத்திற்கும் இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.