• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000/= ரூபா பெறுமதி மிக்க போசாக்கு உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
- குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறப்பதை இலங்கையில் இல்லாதொழிப்பதற்கும் உடல், உளரீதியில் ஆரோக்கியம் மிக்க குழந்தைகள் பிறப்பதற்குமாக கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் இறுதி ஆறு (06) மாதங்களுக்கும் பாலூட்டும் முதல் நான்கு மாதங்களும் உள்ளடங்கும் விதத்தில் பத்து (10) மாத காலத்திற்கு 20,000/= ரூபா பெறுமதிமிக்க போசாக்கு உணவுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமானது 2015 மார்ச் மாதத்திலிருந்து அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தாய்மார்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு வகைகளைத் தெரிவு செய்வதற்கான வசதிகளை செய்யும் விதத்திலும் தற்போது நடைமுறையிலுள்ள முறையை மேலும் இலகுபடுத்தும் பொருட்டும் புதிய வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களிலிருந்து தமக்கு வசதியான ஒரு வர்த்தக நிறுவனத்தில் மாதமொன்றுக்கு 2,000/= ரூபா என்னும் உச்சத்திற்கு உட்பட்டு உரிய பத்து (10) மாதகாலமும் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு பயனாளிகளான கர்ப்பிணி தாய்மார்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதற்கமைவாக உத்தேச புதிய வழிமுறையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.