• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான ஒருங்கிணைப்பு பணிகளுக்காக செயலகமொன்றைத் தாபித்தல்
- 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் மோதல் முடிவுற்றதன் பின்னர் நல்லிணக்க மற்றும் நீண்டகால சமாதானத்தை அடைவதற்காக உருவாகிய பொன்னான வாய்ப்பு பல்வேறுபட்ட காரணங்களினால் இல்லாமற்போனது. இலங்கையர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தாமதமின்றி செய்யப்படவேண்டிய அத்தியாவசிய விடயமொன்றாகவுள்ளது. தற்போது அமைச்சுக்கள் அடங்கலாக அரசாங்கத்தின் பல்வேறுபட்ட நிறுவனங்களால் நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, இந்த பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மையப்படுத்தப்பட்ட நிறுவனமொன்று இல்லாததன் விளைவாக தீர்மானங்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் நடைமுறைப் படுத்தும் போது தேவையற்ற காலதாமதம் உருவாதல், பணிகள் இரட்டிப்பாதல் போன்ற நடைமுறைப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஆதலால், நல்லிணக்க செயற்பாடுடன் இணைந்த தீர்மானங்கள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் போன்றவற்றை பயனுள்ள வகையில் செயற்படுத்துவதற்கு பின்வரும் பொறுப்புக்களை வகிக்கும் நல்லிணக்க பொறிமுறைகளை கூட்டிணைப்பதற்கான செயலகமொன்றை (Secretariat for Coordinating the Reconciliation Mechanisms - SCRM) உடனடியாக செயல்வலுவுக்கு வரத்தக்கதாக பிரதம அமைச்சரின் அலுவலகத்தில் தாபிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் தேசிய மட்டத்திலான கலந்துரையாடல்களை ஒருங்கிணைத்தல்.

* “காணாமற்போன ஆட்கள் தொடர்பிலான அலுவலகம்", “உண்மை. ஒருமைப்பாடு மற்றும் மீள மோதல்கள் ஏற்படாமல் இருப்பதற்கான ஆணைக்குழு" போன்ற நல்லிணக்க பொறிமுறைகளைத் தாபிப்பதற்காக திட்டவட்டமான காலப்பகுதியுடன் திட்டமொன்றை அபிவிருத்தி செய்தல்.

* இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட உள்நாட்டு நிறுவனங்ஙகளுடனும் அதேபோன்று மனித உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் அலுவலகம் (OHCHR) போன்ற சருவதேச நிறுவனங்களுடனும் ஒருங்கிணைப்பைப் பேணுதல்.

* கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) உட்பட ஏனைய ஆணைக்குழு அறிக்கைகளிலும் OHCHR அறிக்கையிலும் உள்ள சிபாரிசுகளை செயற்படுத்துவதில் காணப்படும் முன்னேற்றம் பற்றி ஆராய்தலும் ஒருங்கிணைப்பினைப் பேணுதலும்.

* சட்டவாட்சி, மனித உரிமைகள், நிருவாகம் மற்றும் நீதித் துறை மறுசீரமைப்பு என்பவற்றைப் பலப்படுத்துதலும் அதுசார்ந்த ஏனைய தேவைகளை ஒருங்கிணைத்தலும்.