• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு தேயிலை ஏலத்தில் விலையை ஒருநிலைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தலையீடு
- இலங்கையிடமிருந்து தேயிலை கொள்வனவு செய்யும் நாடுகளில் நிலவும் பிரச்சினையான நிலைமைகள் காரணமாக எமது தேயிலைக்கான கேள்வி வீழ்ச்சியடைந்துள்ளமையினால், 2014 ஆம் ஆண்டில் கிடைத்த விலைகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தோ தேயிலையின் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்து வருகின்றது.

பொதுவாக தேயிலை கிலோ ஒன்றின் உற்பத்தி செலவு 450/- ரூபாவாக இருந்தாலும் தேயிலை ஏலத்தின் போது ஆகஸ்ட் மாதத்தில் தேயிலை கிலோ ஒன்றின் விலை 385.51 ரூபாவரை வீழ்ச்சியடைந்திருந்தது. இந்த நிலைமை பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் அடங்கலாக தேயிலை செய்கையில் ஈடுபட்டுள்ள சகலருக்கும் பாரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. தேயிலை செய்கை துறைக்கு சலுகை அளிப்பதற்காக சுமார் 6,000 மில்லியன் ரூபாவை செலவு செய்து சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு பச்சை தேயிலைக் கொழுந்துக்கு உத்தரவாத விலையொன்றை வழங்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் சலுகை அடிப்படையின் கீழ் தொழிற்படு மூலதனத்துக்காக கடன் வழங்கப்பட்டது. துரிதமாக தேயிலையின் விலை வீழ்ச்சியடையும் பின்னணியில் மேற்போந்த விதத்தில் சலுகை அளிப்பது மாத்திரம் நடைமுறைச்சாத்தியமற்றதாகையினால், ஏலத்தில் தேயிலையின் விலையை உயர்த்துவதற்கு அரசாங்கம் தலையிடவேண்டியுள்ளது.

2008 ஆம் ஆண்டில் உலக பொருளாதார பிணக்கின் போது இதே மாதிரி தேயிலையின் விலை வீழ்ச்சியடையும் போது அரசாங்கத்தினால் ஏலத்தில் தேயிலை கொள்வனவு செய்ததன் மூலம் தேயிலையின் விலை வீழ்ச்சியை திருப்திகரமாக கட்டுப்படுத்தியது. இந்த அனுபவத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நடப்பாண்டிலும் இலங்கை தேயிலைச் சபையினால் சிறந்த தரத்திலான தேயிலை கிலோ ஒன்றை 430/- என்னும் விலையின் கீழ் எதிர்வரும் ஏலங்களில் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதியினை அரசாங்கத்தினால் வழங்குவதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. தேயிலை கிலோ ஒன்றுக்காக ஏலத்தின்மூலம் கிடைக்கும் விலை 450/- மட்டத்தை அடைந்ததன் பின்னர், இவ்வாறு அரசாங்கத்தினால் தேயிலை கொள்வனவானது இடைநிறுத்தப்படும்.