• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஸ்மார்ட் மானி வாசிப்பு கருவிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்து இலங்கையின் மின்வலு துறைக்கு அறிமுகப்படுத்துதல்
- கடந்த காலப்பகுதியில் இலங்கையில் மின்சாரதுறை பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளதோடு, தற்போது நாடு முழுவதும் தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்களும் மின்சாரம் வழங்கி 100 சதவீதத்திற்கு கிட்டிய மின்சார வழங்கல் தழுவப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகத்தில் மின்சார தொழினுட்பம் நாளுக்கு நாள் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றதோடு, மின்சார உற்பத்தி, விநியோகம், பாவனை முதலியவற்றில் உயர் தொழினுட்ப முறைகள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் அதனை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய அளவில் நன்மைகள் பெற்றுக் கொள்ளலாம். இதன்போது உள்நாட்டு மின்சார முறைமைக்கு ஸ்மார்ட் மானி வாசிப்பு கருவிகளை அறிமுகப்படுத்துவது அத்தியாவசிய முன்னுரிமை வாய்ந்ததாகும். ஸ்மார்ட் மானி வாசிப்பு கருவிகளின் பாவனையானது மின்சார கேள்வியை சிறந்த முறையில் முகாமித்துக் கொள்வதற்கு உதவுவதோடு, மின்சார பாவனையை சுயமாக கட்டுப்படுத்திக் கொள்வதற்கு நுகர்வோர்களுக்கு அறியச் செய்வித்தல், குளிரூட்டி இயந்திரங்களின் செயற்பாட்டினைக் கட்டுப்படுத்தல் போன்ற சேவைகளையும் வழங்கும். இதற்கமைவாக, இலங்கை மின்சார சபையும் பேராதனை பல்கலைக்கழகமும் இணைந்த கருத்திட்டமொன்றாக 49.2 மில்லியன் ரூபா செலவில் உள்நாட்டு சந்தைக்குத் தேவையான ஸ்மார்ட் மானி வாசிப்பு கருவிகளை உற்பத்தி செய்து அபிவிருத்தி செய்வதற்காக கருத்திட்டமொன்றை ஆரம்பிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.