• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிச் சுற்றுவட்ட நெடுஞ்சாலை கருத்திட்டத்தின் கெரவலபிட்டியவிலிருந்து கடவத்தை வரையிலான (9.32 கி.மீ.) III ஆம் கட்டத்தின் விடய நோக்கெல்லையை மாற்றுதல்
- வெளிச் சுற்றுவட்ட நெடுஞ்சாலை கருத்திட்டத்தின் III ஆம் கட்டத்தின் கெரவலபிட்டியவிலிருந்து கடவத்தை வரையிலான 9.32 கிலோ மீற்றர் பகுதியை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை 66.69 பில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு சீனாவின் Metallurgical Corporation of China Ltd. (MCC) நிறுவனத்துக்கு வழங்குவதற்காக 2013 ஆம் ஆண்டில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிருமாணிப்புக்காக செலவாகும் கூடிய செலவினையும் வீதி நிருமாணிப்புத் துறைசார்ந்த நிபுணர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நிருமாணிப்பு விடயநோக்கெல்லைக்கு பின்வரும் மாற்றங்களைச் செய்வதற்கும் இதன் மூலம் மொத்த ஒப்பந்த செலவினை 35.9 சதவீதத்தால் அதாவது 23.93 பில்லியன் ரூபாவினால் குறைப்பதற்கும் பின்னர் தீர்மானிக்கப்பட்டது.

(i) அதிவேக வீதி பகுதியை நான்கு பாதைகளாக நிருமாணித்தல்.

(ii) தூண்களின் மீது நிருமாணிக்கப்படும் வீதியின் (Viaducts) நீளத்தைக் குறைத்தல்.

(iii) தூண்களின் மீது நிருமாணிக்கும் வீதியின் உயரத்தைக் குறைத்தல்.

ஆயினும், மேற்போந்த மாற்றங்களுக்கு உரிய ஒப்பந்தக்காரரரின் உடன்பாடு கிடைக்காததன் காரணமாக குறித்த அதிவேகப் பாதை பகுதியின் நிருமாணிப்பு பணிகள் தாமதமடைந்துள்ளன. இந்த முதலீட்டின் முழு நலனையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வீதி பாதுகாப்பு முறைமைகளில் எந்தவித மாற்றங்களுமின்றி வேலை விடயநோக்கெல்லையில் மேற்கொள்ளக்கூடிய மாற்றங்கள் சம்பந்தமான அறிக்கையொன்றை நிருமாணிப்பு மேற்பார்வை ஆலோசகரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பின்வரும் இரண்டு பிரதான மாற்றங்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன:

* இந்த அதிவேகப் பாதை பகுதியின் கெரவலப்பட்டிய இடைமாற்று இடமொன்று நிருமாணிக்கப்படுகின்றமையினால் அதற்கண்மையில் பேலியகொட - புத்தளம் வீதியில் நிருமாணிக்கப்படவுள்ள இடைமாற்று இடத்தை நீக்குதல்.

* இந்த அதிவேகப் பாதையின் I ஆம் II ஆம் கட்டங்கள் நான்கு பாதைகளாக நிருமாணிக்கப்பட்டுள்ளமையினால் இந்த III ஆம் கட்டத்தையும் நான்கு பாதைகளாக நிருமாணித்தல்.

இதற்கமைவாக, ஆரம்ப ஒப்பந்த தொகையிலிருந்து 14.84 சதவீதம் அதாவது 9.9 பில்லியன் ரூபா சேமிப்பொன்று ஏற்படும் விதத்தில் வேலை விடயநோக்கெல்லையில் மாற்றங்களைச் செய்து கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.