• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 2016 - 2018
- இலங்கையின் பிரதான உணவு வகைகளை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் சுமார் 200 பில்லியன் ரூபா செலவு செய்த போதிலும் அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் உணவு வகைகளின் அதிகளவு உள்ளூரில் கிருமிநாசினிகள் களைக்கொல்லிகள் பாவிக்காது தரம்வாய்ந்த விதத்தில் உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றல் நிலவுகின்றது. அதேபோன்று நுகரப்படும் விலங்கு உற்பத்திகளையும் மீன் உற்பத்திகளையும் மேலும் அதிகரித்துக் கொள்ளும் ஆற்றலும்கூட நிலவுகின்றது. இதற்கமைவாக, வருடாந்தம் செலவாகும் இறக்குமதிச் செலவினை குறைத்து உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய சகல உணவு வகைகளையும் ஆகக் கூடுதலாக நாட்டில் உற்பத்தி செய்து கொள்வது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

இதற்கமைவாக, இயைபுள்ள சகல அமைச்சுக்களினதும் நிறுவனங்களினதும் பங்களிப்புடன் 2016 - 2018 காலப்பகுதிக்குள் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதற்காக 15,595 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பின்வரும் நோக்கங்கள் நிறைவு செய்யப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

* கமத்தொழில் சுற்றாடல் வலயங்களை அடிப்படையாகக் கொண்ட பயிர் உற்பத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டில் சீரான அபிவிருத்தியை உருவாக்குதல்.

* உள்ளூரில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுகளின் மூலம் நாடு தன்னிறைவை காண்பதன் ஊடாக உணவு இறக்குமதிக்காக செலவாகும் பாரிய அந்நிய செலாவணியை சேமித்துக் கொள்தல்.

* உணவு உற்பத்தியில் கம இரசாயன பொருட்களின் பாவனையை ஆகக் குறைத்து சுற்றாடல் நட்புறவு மிக்க வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தரம்மிக்க உணவுப் பொருட்களை கிடைக்கக் கூடியதாக செய்தல்.

* மீன் உணவுப் பொருள் உற்பத்தியின் தரத்தினை அங்கீகரிக்கப்பட்ட தரங்களாக மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கு நிலைமையை மேம்படுத்துதல்.

* உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை வினைத்திறமையுடன் பகிர்ந்தளித்தல், மேலதிக உணவு சேர்மங்களை முறைமையாக முகாமித்தல் என்பன மூலம் உணவுப் பாதுகாப்பினை ஏற்படுத்துதல்.

* உணவு உற்பத்தி நடவடிக்கைகளின் போது தரம்மிக்க உள்ளீடுகள், ஏற்ற தொழினுட்ப மற்றும் இயந்திர முறைகள் பயன்படுத்துவதன் ஊடாக உற்பத்தி விளைவுப் பெருக்கத்தை கூட்டுதலும் உற்பத்தி செலவினைக் குறைத்தலும்.

* உள்நாட்டு உணவு உற்பத்தியுடன் தொடர்புபட்ட சகல நிறுவனங்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பினை உருவாக்குதலும் பாடசாலை மாணவர்கள் கமநல அமைப்புகள் நானாவித சிவில் அமைப்புகள் என்பனவற்றின் ஊடாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்று சேர்த்தலும்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தை 2015 ஆம் ஆண்டின் பெரும்போகத்திலிருந்து ஆரம்பித்து 2016 - 2018 வரையிலான காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.