• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க நிதிகளை பயன்படுத்தும் போது நிகழும் வீண்விரயத்தை குறைத்தல்
- அரசாங்க நிதிகளை செலவு செய்யும் போது சிக்கனமாக செயலாற்றுவது சம்பந்தமாக அரசாங்கம் அதன் அர்ப்பணிப்பினை வெளிப்படுத்த வேண்டுமென மாண்புமிகு பிரதம அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அரசாங்க நிதிகளை பயன்படுத்தும் போது நிகழும் வீண்விரயத்தைக் குறைப்பதற்காக பின்வருமாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது:

* அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ஏனைய தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உட்பட அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகியோர்களினால் செய்யப்படும் வெளிநாட்டு விஜயங்களை இயலுமானவரை வரையறுத்தல்.

* அத்தியாவசிய தன்மையிலான வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது, கட்டாயமாக உரிய பணிகளில் கலந்து கொள்ள வேண்டியவர்களை மாத்திரம் பிரதிநிதிகள் குழுவில் உள்வாங்குதல்.

* துணை வாகனங்களும் பாதுகாவலர்களின் சேவையும் வழங்கப்பட்டுள்ள பிரமுகர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தற்போது வழங்கப்படவேண்டிய பாதுகாப்புப் பற்றி செய்யப்படும் மதிப்பீட்டின் பின்னர், அவர்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் வாகனங்களின் எண்ணிக்கையையும் இயலுமானவரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.

* மேற்குறிப்பிட்ட சகல வழிகாட்டல்களையும் மாகாண அதிகாரபீடங்களுக்கு, பாதுகாப்பு படைகளுக்கு, அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கு, நியதிச்சட்ட சபைகளுக்கு, அரசுடமைக் கம்பனிகளுக்கு ஏற்புடையதாக்குதல்.