• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"பொலன்நறுவை எழுச்சி” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2016-2020
- ரஜரட்ட பிரதேசத்திற்குச் சொந்தமான பொலன்நறுவை மாவட்டம் 07 பிரதேச செயலகப் பிரிவுகளையும் 295 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. முக்கியமாக நகரப் பிரதேசத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் தற்போதைய மக்கள் தேவைகளுக்கு போதுமானதாக இல்லாததோடு கிராமிய பிரதேசங்களில் சுகாதாரம், கல்வி மற்றும் வீதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் குறைந்த மட்டத்தில் உள்ளன. விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நிலவிய மோதல் நிலைமைக்கு முகங்கொடுத்த வெலிகந்த, திம்புலாகல, மெதிரிகிரிய, லங்காபுர போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் கீழ் நிலையில் உள்ளன. இதன் காரணமாக பொலன்நறுவை மாவட்டத்தின் பொதுமக்கள் கஷ்டமான வாழ்க்கை நிலையை கொண்டுள்ளதோடு, பல்வேறுபட்ட சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அருகிலுள்ள மாவட்டங்களுக்கு செல்லவேண்டியுமுள்ளது.

மேற்குறிப்பிட்ட ஐந்து வருட கால நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 60 பில்லியன் ரூபா செலவில் மாவட்டத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் குடிநீர் கருத்திட்டமும் சிறுநீரக நோயாளிகளுக்கு வைத்தியசாலையொன்றை நிருமாணிக்கும் கருத்திட்டமும் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல கருத்திட்டங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனிப்பட்ட நன்கொடைகளின் மூலம் நிதியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஐந்து வருடகால திட்டத்தின் கீழ் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இனங்காணப்பட்டுள்ள கல்வி, சுகாதாரம் மற்றும் கிராம வீதிகள் போன்ற துறைகளில் சில கருத்திட்டங்கள் 2015 ஆம் ஆண்டில் ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, அதற்கு அண்ணளவாக 750 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, "பொலன்நறுவை எழுச்சி” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை 2016-2020 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் கீழ் துரிதமாக ஆரம்பிக்கப்படவேண்டிய கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.