• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர்கொழும்பு நகர பிரதேசத்திற்கான கழிவுநீர் முகாமைத்துவ முறைமையொன்றைத் தாபித்தல்

- இலங்கையில் கழிவுநீர் அப்புறப்படுத்தல் முறைப்பற்றி பரிசீலனை செய்யும் போது கூட்டு கழிவுநீர் முகாமைத்துவ முறைமையுடன் மொத்த சனத்தொகையின் 2.4 சதவீதம் இணைந்துள்ளதெனவும் மொத்த சனத்தொகையின் பெரும்பான்மையானோர் தனித்தனி துப்பரவேற்பாட்டு முறைமைகளை (அதாவது ஒவ்வொரு வீட்டுக்கும் புறம்பாக நிருமாணிக்கப்பட்ட) பயன்படுத்துகின்றார்களெனவும் தெரிய வருகின்றது. தற்போதுள்ள கூட்டு துப்பரவேற்பாட்டு முறைமைகளில் பெரும்பாலனவை பழைமை வாய்ந்தவையாவதோடு, அவை முறையாக பராமரிக்கப்படவுவில்லை. ஆதலால், அவற்றின் செயற்பாடு குறைவடைந் துள்ளது. உரிய முறையில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வடிகால் அமைப்பு முறைமைக்குள் வெளியேற்றப்படுவதன் மூலம் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றாடலுக்கும் பிரதிகூலமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, நீர்கொழும்பு, காலி, மற்றும் களனிய - பேலியகொடை பிரதேசங்களைத் தழுவும் மூன்று (03) கழிவுநீர் முகாமைத்துவ முறைமைகளைத் தாபிக்கும் பொருட்டு "Sanitation & Hygiene Initiative for Towns - SHIFT” கருத்திட்டத்தின் மூலம் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 107 மில்லியன் யூரோக்களைக் கொண்ட செலவில் நீர்கொழும்பு நகர பிரதேசத்திற்கான கழிவுநீர் முகாமைத்துவ முறைமையொன்றைத் தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதோடு, பிரான்ஸ் அபிவிருத்தி முகவராண்மை அதற்காக 76 மில்லியன் யூரோக்களைக் கொண்ட நிதி வசதியினை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, பிரான்ஸ் அபிவிருத்தி முகவராண்மையுடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.