• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுநீரக நோயாளிகளுக்காக பொலன்நறுவையில் நிருமாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை கட்டடத் தொகுதிக்காக காணி சுவீகரித்தல்
- இலங்கையில் வடமத்திய மாகாணம் நீண்டகால சிறுநீரக நோய் பரவலாகவுள்ள பிரதேசமொன்றாகும். அண்மைக்கால புள்ளி விபரங்களின்படி பொலன்நறுவை மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறுநீரக நோய் கிளினிக்கில் மாத்திரம் சுமார் 2,500 சிறுநீரக நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குடியரசுக்கும் மக்கள் சீனக் குடியரசுக்கும் இடையில் 2015 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடனும் கூடிய சிறுநீரக நோய் சிகிச்சையின் பொருட்டு வைத்தியசாலைக் கட்டடத்தொகுதியொன்றை 600 மில்லியன் யுவான் (அண்ணளவாக 12,840 மில்லியன் ரூபா) செலவில் நிருமாணிப்பதற்கு மக்கள் சீனக் குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த நிருமாணிப்புக்கு பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலை மனையிடத்தில் நிலவும் இடவசதி போதுமானதாக இல்லாமையினால் அதற்கண்மையில் அமைந்துள்ள பொலன்னறுவை மீன் இனப்பெருக்க நிலையமும் மாவட்ட நீர்வாழ் உயிரின விரிவாக்கல் அலுவலகமும் உள்ள 7.27 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணியை சுவீகரித்துக் கொண்டு அதற்காக பயன்படுத்துவதற்கும் பொலன்னறுவை மீன் இனப்பெருக்க நிலையத்தில் உள்ள வசதிகள் மற்றும் ஆற்றல் போன்றவை குறைவடையாத விதத்தில் பிரசேத்தில் பொருத்தமான வேறு இடமொன்றில் தாபிப்பதற்குமாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினாலும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.