• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தகவல் அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பிலான சட்டமூலம்

- அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தகவல் அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மேற்போந்த சட்டமூலம் அரசியலமைப்பின் 122 ஆம் உறுப்புரையின் பிரகாரம் அவசர சட்டமூலமொன்றாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேற்போந்த சட்டமூலத்தில் விசேட அம்சங்கள் பின்வருமாறாகும்:

* தகவல் அறிந்து கொள்ளும் உரிமை இலங்கையிலுள்ள பிரசைகள் அனைவருக்கும் உரியதாகும்.

* தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமை என்னும் போது அரசாங்க நிறுவனமொன்றுக்கு உரிய, அதன் கட்டுக்காப்பில் அல்லது அதன் கீழுள்ள அத்தகைய தகவல்களை பெற்றுக் கொள்வதற்குள்ள உரிமை எனப் பொருள்படும். ஆயினும், பின்வரும் சந்தர்ப்பங்களில் தகவல்களை வழங்குவதனை நிராகரிக்கலாம்:

(i) பொது நடவடிக்கையொன்றுக்கு அல்லது கடப்பாட்டுக்கு எவ்வித சம்பந்தமும் அல்லாத தனிப்பட்ட தகவல்கள் உட்பட அதுசார்ந்த தகவல்கள் அல்லது வெளிப்படுத்தினால் ஆள் ஒருவரின் தனிப்பட்ட விடயத்திற்கு பாதிப்பேற்படுத்தும் விதத்திலான தகவல்கள்.

(ii) வெளிப்படுத்துவதன் காரணமாக அரச பாதுகாப்புக்கு அல்லது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அல்லது இலங்கையின் சருவதேச உறவுகளுக்கு அல்லது சருவதேச சட்டத்தின் கீழ் அதன் பொறுப்புகளுக்கு கடும் பிரதிகூலத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ள தகவல்கள்.

(iii) வெளிப்படுத்துவதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய தகவல்கள்.

(iv) வெளிப்படுத்துவதன் காரணமாக எவரேனும் ஆளொருவரின் வர்த்தக ரீதியிலான பொறுப்புகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அல்லது ஏதேனும் வர்த்தக இரகசியத்தை வெளிக்கொணரும் தகவல்கள்.

(v) வெளிப்படுத்துவதன் காரணமாக எவரேனும் ஆளொருவர் சம்பந்தமான மருத்துவ அறிக்கைககள் வெளிக்கொணரும் தகவல்கள்.

(vi) சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் அனுமதி வழங்கப்படாத தகவல்களை வெளிப்படுத்துதல்.

(vii) ஏதேனும் நம்பத்தகுந்த உறவொன்று நிலவுவதன் காரணமாக இரகசியமாக பேணுவதற்கு தேவையான தகவல்களை வெளிப்படுத்தல்.

(viii) ஏதேனும் குற்றமொன்றைத் தடுத்தல் அல்லது கண்டறிதல் சம்பந்தமான தகவல்கள் அல்லது குற்றவாளிகளை கைதுசெய்தல் அல்லது அவர்களுக்கு எதிராக வழங்குத் தொடர்வதற்கு ஏற்புடையதான ஏதேனும் தகவலொன்றை வெளிப்படுத்துவதனால் குறித்த பணிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய தகவல்கள்.

(ix) ஏதேனும் அரசாங்க நிறுவனமொன்றினால் இரகசியமாக பெற்றுக் கொள்ளவேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ள தகவல்கள்.

(x) வெளிப்படுத்துவதன் காரணமாக நீதி மன்றத்தை அவமதிக்கும் அல்லது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் தகவல்கள்.

(xi) பரீட்சை திணைக்களத்தினால் அல்லது உயர் கல்வி நிறுவனமொன்றினால் நடாத்தப்பட்ட பரீட்சையொன்று சம்பந்தமாக இரகசியமாக பேணப்படவேண்டிய தகவல்கள்.

* தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை நடைமுறைப்படுத்துவதனை இலகுபடுத்தும் பொருட்டு தகவல் அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பிலான ஆணைக்குழுவொன்று தாபிக்கப்படும். இரகசியமாக பேணப்படவேண்டிய தகவல்கள் எவையென்பது பற்றி தீர்மானிப்பதற்கு இந்த ஆணைக்குழு தலையிடும்.

* இந்த ஏற்பாடுகளை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவது அரசாங்க நிருவாகம் என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.