• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ள பாரிய அளவிலான ஊழல்கள் பற்றி கண்டறிவதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்தல்

- இந்த விடயம் தொடர்பில் மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விஞ்ஞாபனமும் மின்வலு மற்றும் சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விஞ்ஞாபனமும் தொடர்பில் அமைச்சரவையினால் ஆழமாக கலந்துரையாடப்பட்டது. இதற்கமைவாக தேசிய நிறைவேற்றுச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட "ஊழல் எதிர்ப்புக் குழு" ஒன்றைத் தாபிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது:

(i) மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,
பிரதம அமைச்சர் - (தலைவர்);

(ii) மாண்புமிகு மங்கள சமரவீர அவர்கள்,
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்;

(iii) மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்கள்,
மின்வலு மற்றும் சக்தி அமைச்சர்;

(iv) மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்கள்,
நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்;

(v) கௌரவ ஆர். சம்பந்தன் அவர்கள்,
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும்;

(vi) கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்கள்.
பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்;

(vii) கௌரவ எம்.ஏ.சுமந்திரன் அவர்கள்,
பாராளுமன்ற உறுப்பினர்;

(viii) ஜெனரல் சரத் பொன்சேக்கா அவர்கள்,
சனநாயக கட்சியின் தலைவர்;

(ix) கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள்;

(x) சட்டத்தரணி ஜே.சி.வலிஅமுன அவர்கள்; அத்துடன்

(xi) திரு.மலிக் சமரவிக்கிரம அவர்கள்.

இந்தக் குழுவின் ஆலோசனையின் பிரகாரம் உடனடியாக செயலாற்றக் கூடிய குழுவொன்றையும் கூட தாபிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்தக் குழு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்:

(i) பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்கள் - (ஒருங்கிணைப்பாளர்) ;

(ii) அரசாங்க உத்தியோகத்தர்கள்;
(iii) பொலிஸ் உத்தியோகத்தர்கள்;
(iv) சட்டத்தரணிகள்;
(v) நிதி மற்றும் கணக்காய்வு நிபுணர்கள்; அத்துடன்
(vi) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள்.

இதன் போது ஊழல்களை தடுப்பதற்காக ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பு பற்றியும் இதன் ஏற்பாடுகள் குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்கள் பற்றியும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு விசேட சட்டமொன்றை அறிமுகப்படுத்தும் தேவை பற்றி கலந்துரையாடப்பட்டது. ஏற்கனவேயுள்ள சட்ட ரீதியிலான நிறுவன கட்டமைப்பிற்குள் தெரிவு செய்யப்பட்டுள்ள பொருத்தமான உத்தியோகத்தர்களை தேவையான சந்தர்ப்பங்களில் நியமனம் செய்து குறித்த நிறுவனங்களின் ஊடாக எடுக்கப்படக் கூடிய குறுகியகால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை இணங்கியொழுகுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் பின்வரும் விடயங்களின்பால் கவனம் செலுத்துவதற்கு மேலும் தீர்மானிக்கப்பட்டது.

பிரேரிக்கப்பட்டுள்ள குறுகியகால நடவடிக்கைகள்

(i) சனாதிபதி தேர்தல் காலத்தில் விநியோகிப்பதற்காக கொண்டுவந்து தற்போது களஞ்சியப்படுத்தியுள்ள பொருட்கள் பற்றி ஆராய்ந்து அவை பற்றி தெரியப்படுத்துதல்;

(ii) காணி, அசைவுள்ள மற்றும் அசைவற்ற சொத்துக்கள் முறைக்கேடாக பெற்றுக் கொண்டுள்ளமை பற்றி ஆராய்ந்து அவை பற்றி தெரியப்படுத்துதல்;

(iii) ஊழியர் சேமலாப நிதியம், பங்குசந்தை தொடர்பிலான ஊழல் மற்றும் முறைக்கேடு பற்றி ஆராய்ந்து தெரியப்படுத்துதல்;

(iv) பாரிய அளவிலான ஊழல்களுக்கு பொறுப்பு சொல்லவேண்டிய மோசடிக்காரர்கள் என சந்தேகிக்கப்படும் ஆட்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றி ஆராய்ந்து அவை தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

பிரேரிக்கப்பட்டுள்ள நீண்டகால நடவடிக்கைகள்

(i) முறைகேடாக இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் ஆராய்ந்து அவற்றை பறிமுதல் செய்தலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குதலும்;

(ii) பலம்மிக்க இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவொன்றை அறிமுகப்படுத்துதல்;

(iii) தேசிய கொள்வனவு ஆணைக்குழுவொன்றை நியமித்தலும் அதனூடாக சகல கருத்திட்டங்களுக்கும் அங்கீகாரம் வழங்குதலும்;

(iv) தேசிய கணக்காய்வு சட்டமொன்றைச் சமர்ப்பித்தல்;

(v) இலங்கை கைச்சாத்திட்டுள்ள ஐக்கிய நாடுகளின் ஊழல் எதிர்ப்பு சமவாயத்தை நடைமுறைப்படுத்தல்.

நிதித் துறையில் நிகழும் முறைக்கேடுகள் பற்றி ஆராய்வதற்காக விசேட திறமைகொண்ட குழுவொன்றின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்ளும் தேவை வலியுறுத்தப்பட்டதோடு, இதற்காக இந்தியாவின் மத்திய வங்கியின் கீழ் செயற்படும் நிதி புலனாய்வுப் பிரிவின் ( ) நிபுணர்களின் ஒத்துழைப்பினையும் அதேபோன்று உலக வங்கி உட்பட சருவதேச நிதி நிறுவனங்களின் இந்த துறைசார்ந்த நிபுணர்களின் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு இந்த நிறுவனங்கள் ஏற்கனவே விருப்பினைத் தெரிவித்துள்ளமை பற்றி மாண்புமிகு பிரதம அமைச்சர் அவர்கள் அமைச்சரவைக்கு அறிவித்தார்.

பிரகடனப்படுத்தப்படாத சொத்துக்களின் மூல வளங்களை வெளிக்கொணர்வதை கட்டாயமாக்குவதற்காகவும் துரிதமாக அறிமுகப்படுத்துவதற்குமாக ஏற்கனவேயுள்ள நிறுவனங்களுக்குப் பதிலாக விளைத்திறமையும் பரந்துபட்ட அதிகாரமும் கொண்ட நிறுவனமொன்றைத் தாபிக்கும் பொருட்டும் விரிவான ஏற்பாடுகளைக் கொண்ட சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் கூட அங்கீகாரம் வழங்கப்பட்டது:

(i) மாண்புமிகு விஜேதாச ராஜபக்‌ஷ அவர்கள்,
நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் - (தலைவர்);

(ii) மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்கள்,
மின்வலு மற்றும் சக்தி அமைச்சர் ;

(iii) மாண்புமிகு மங்கள சமரவீர அவர்கள்,
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ; அத்துடன்

(iv) மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்கள்,
நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்.

ஒவ்வொரு அமைச்சின் கீழும் நிகழ்ந்துள்ள ஊழல் தொடர்பிலான தகவல்களை கூடியவரை சாட்சிகளுடன் மிக விரைவில் பிரதம அமைச்சரின் அவலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு மாண்புமிகு அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.