• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களையும் நெல் சேகரிப்பாளர்களையும் பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்

- நெல் கொள்வனவு செய்து அரிசியாக மாற்றி விநியோகிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு நெல்லுக்கான அரசாங்கத்தின் உத்தரவாத விலையொன்றை நிர்ணயிக்கும் செயற்பாட்டுக்கும் நுகர்வோருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விலைக்கு அரிசியை வழங்குவதற்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களும் நெல் சேகரிப்போர்களும் பாரிய பங்களிப்பைச் செய்கின்றனர். நாட்டின் மாதாந்த அரிசிப் பயன்பாடு சுமார் 180,000 மெ.தொ. ஆகும் என்பதுடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் நெல் சேகரிப்பாளர்களுக்கும் சந்தையின் அரிசித் தேவைப்பாட்டில் சுமார் 60 வீத உற்பத்தி ஆற்றல் உள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களையும் நெல் சேகரிப்பாளர்களையும் பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கும் இயற்கை அனர்த்தங்களின் மூலம் அறுவடையில் பாதிப்புகள் ஏற்படுவதன் காரணத்தினால் கடந்த காலத்தில் செலுத்துவதற்கு முடியாது போன அவர்களது கடனை தீர்வை செய்து அவர்களுக்கு துரிதமான சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இதற்கமைவாக, நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர் களினாலும் நெல் சேகரிப்பாளர்களினாலும் நெல் கொள்வனவுக்காகப் பெற்றுக் கொண்ட கடனை செலுத்தாதது தொடர்பில் குறித்த வங்கியினால் அவர்களுக்கு எதிராக இற்றைவரை எடுத்துள்ள சட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கும்;

* அவர்களினால் நெல் கொள்வனவுக்காக 1997 தொடக்கம் 2010 வரையிலான காலப்பகுதிக்குள் பிணையக் கடனாக அரசாங்க வங்கிகளிலிருந்து பெற்றுக் கொண்ட கடன்தொகையில் மீதியாகவுள்ள கடன்மீதியை அறவிடாமல் இருப்பதற்கும் பொது திறைசேரியினால் உரிய வங்கிகளுக்குத் தேவையான நிதியை வழங்குவதற்கும்;

* 2013/2014 பெரும்போகத்தின் போதும் 2014 சிறுபோகத்தின் போதும் நெல் கொள்வனவுக்காக அரசாங்க வங்கியினால் வழங்கப்பட்ட பிணையக் கடனை மீள செலுத்துவதற்கு 2015‑01‑01 தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக ஆறு (06) மாத சலுகைக்காலமொன்றை வழங்குவதற்கும்;

* அவர்களினால் வழங்கப்பட்ட சம்பா அரிசியும் ஏனைய அரிசியும் மொத்த விலையாக கிலோ 1க்கு முறையே 85/= ரூபாவுக்கும் 82/= ரூபாவுக்கும் வரையறுக்கப்பட்ட லங்கா ச.தொச ஊடாக கொள்வனவு செய்வதற்கும் அதற்காக வரையறுக்கப்பட்ட லங்கா ச.தொச நிறுவனத்துக்கு நிதி வசதிகளை வழங்குவதற்கும்;

* அவர்களுக்கு மின்சக்தி தேவைப்பாட்டை கருத்திற்கொண்டு கட்டண அறவீடின்றி அவர்களுக்கு மின்சார ட்ரான்ஸ்போமர்களை வழங்குவதற்கும் அதற்கான செலவினத்தை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்வதற்கும்; அத்துடன்

* நெல் கொள்வனவையும் களஞ்சிய கொள்ளவையும் அதிகரிப்பதற்கும் நவீன தொழினுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரிசியின் தரத்தை அதிகரிப்பதற்கும் சலுகை அடிப்படையிலான வட்டிவீதத்தைக் கொண்ட புதிய கடன் திட்டமொன்றை அவர்களுக்காக நடைமுறைப் படுத்துவதற்கும்.