• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
கல்விசார் ஒத்துழைப்பை நோக்காகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை / ஒப்பந்தங்களை செய்து கொள்ளல்
- உயர் கல்வி ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் / முகவராண்மைகளுக்கும் இடையில் பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை / ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கும் இயற்கை வளங்களின் ஒருங்கிணைந்த முகாமைத்துவம் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதனை ஊக்குவிப்பதற்குரியதாக இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் செல்பேர்ட் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* உலகளாவிய சுகாதார முயற்சிகளை ஒருங்கிணைப்பதனை நோக்காகக் கொண்டு பிராந்திய ஒத்துழைப்பு மையமொன்றைத் தாபிப்பதற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், சிங்கபூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் சிங்கபூர் சுகாதார சேவை (தனியார்) கம்பனி என்பவற்றுக்கு இடையிலான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு இறுதி மாதவிடாயின் பின்னர் ஏற்படும் மனநல தாக்கங்கள் தொடர்பான MARIE கருத்திட்டத்திற்கு உரியதாக ருகுணு பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தினதும் வட அயர்லாந்தினதும் Southern Health NHS Trust என்பவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* சீன மாணவர்களுக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் கற்கை நெறிகளை அங்கீகரித்தல் மற்றும் விருத்தி செய்தல் என்பன சார்பில் தகுதி வாய்ந்த பிரதிநிதியாக Tomorrow Technology Education Service Center என்பதை பெயர் குறிப்பிடுவதற்கும் செயல்வலுவாக்கம் அளிப்பதற்கும் உரியதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் சீனாவின் Tomorrow Technology Education Service Center இற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* இரு தரப்புகளுக்கும் இடையில் ஒத்துழைப்பினை விருத்தி செய்வது தொடர்பில் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் செக் குடியரசின் தோமஸ் பாட்டா பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* ஆற்றல் அபிவிருத்தி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உயிரின முறைமை தொழிநுட்ப பாவனை தொடர்பாக இலங்கை இரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கும் இத்தாலியின் நேபல்ஸ்​ பெட்றிகோ II பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஒப்பந்தம்.