• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) கல்வியை மேம்படுத்துவதன் மூலம் தொலைத்தொடர்புத் துறையின் அபிவிருத்தி
- இலங்கையில் டிஜிட்டல் பொருளாதார திறமுறைக்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி மற்றும் புத்தாக்கங்கள் சார்பில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) கல்வியை மேம்படுத்துவதன் மூலம் தொலைத்தொடர்புத் துறையை அபிவிருத்தி செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளதோடு, தொலைத்தொடர்பு துறையின் நிலையான அபிவிருத்திக்குத் தேவையான தொழில்சார் நிபுணர்களை உருவாக்குவதற்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கப் பெறும். உரிமம் பெற்றவர்களிடமிருந்து அறவிடப்படும் தொலைத்தொடர்பு அபிவிருத்தி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் தொலைத்தொடர்பு தொழிலின் அபிவிருத்தியின் பொருட்டு பயன்படுத்துவதற்கு அல்லது வழங்குவதற்கு தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, க.பொ.த (உயர் தர) பரீட்சைக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம் பாடமொன்றாக கற்பிக்கப்படும் 1,000 பாடசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை தொலைத்தொடர்பு அபிவிருத்தி கட்டண நிதியத்தின் நிதி ஏற்பாடுகளிலிருந்து வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் "திறன் பாடசாலை கருத்திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதற்கும் சனாதிபதி நிதியத்தின் செயற்பாட்டு உதவியுடன் க.பொ.த (உயர் தர) பரீட்சை சார்பில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தைக் கற்கும் குறைந்த வருமானம் பெறும் 5,000 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் புலமைபரிசில் நிகழ்ச்சித்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கும் தொழிநுட்ப அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் கல்வி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.