• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- அந்நியச் செலாவணிச் சந்தையில் உருவாகியுள்ள தாக்கத்தை தளர்த்தும் நடவடிக்கையொன்றாக நிர்மாணிப்புத் துறைக்கான வாகனங்கள் மற்றும் பிணியாளர் வண்டிகள் தவிர மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வது அரசாங்கத்தினால் ஏற்கனவே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆயினும், SriLankan Airlines Ltd. கம்பனியின் உபயோகத்திற்காக 03 ரம்ப் கோச் வண்டிகள், ஐக்கிய நாடுகளின் குடிசன நிதியத்தின் ஊடாக நன்கொடையாக வழங்கப்பட்ட 03 நடமாடும் மகப்பேற்று அலகுகள், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்படும் 21 டபள் கெப் வண்டிகள், தொழில் அனுமதிப்பத்திர முறை தாபிக்கும் போது இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக கொரிய நிதிய கருத்திட்டத்திற்காக வழங்கப்படும் மோட்டார் வாகனமொன்று, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் விஞ்ஞான, தொழினுட்ப, மனிதவள அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக 02 பேருந்துகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்காக முறையே துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு, சுகாதார அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றினால் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு முன்வைத்த கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு 2023‑12‑11 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இயலுமாகும் வகையில் 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்டதும் 2024‑01‑11 ஆம் திகதியிடப்பட்டதும் 2366/19 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பிரசுரிக்கப்பட்டுள்ள, 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.