• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தை கறுவா அபிவிருத்தி திணைக்களத்திற்கு உடைமையாக்குதல்
- 2023‑09‑01 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் என்னும் பெயரில் புதிய திணைக்களமொன்றைத் தாபிப்பதற்கு 2023‑08‑14 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களத்தின் கீழுள்ள தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தை புதிதாக தாபிக்கப்பட்ட கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக உடைமையாக்குவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தையும் அதன் சகல சொத்துக்களையும் அதேபோன்று தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பணிகளையும் நோக்கங்களையும் கறுவா அபிவிருத்தி திணைக்களத்திற்கு உடைமையாக்கும் பொருட்டு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.