• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
காடு வளர்ப்பு மற்றும் மரக்காப்புச் சட்டத்தை தயாரித்தல்
- ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைக்கப்பட்ட சமவாயத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டளவில் இலங்கை காடுகளின் அளவை மொத்த நிலப்பரப்பின் 32 சதவீதமாக அதிகரிப்பதற்கும் காடுகள் மூலம் உள்வாங்கி வைத்திருக்கும் காபன் அளவினை தற்போதைய நிலையினை விட 7 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும் இலங்கை உடன்பாடு தெரிவித்துள்ளது. இதன் பொருட்டு காடு வளர்ப்பு, அழிந்து போன காடுகளை மீள உருவாக்குதல், காடுகளுக்கு புறம்பாக அரசாங்க மற்றும் தனியார் காணிகளில் மர வளர்ப்பினை அதிகரித்தல் போன்ற செயற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மர நடுகை நிகழ்ச்சித்திட்டங்கள் பல்வேறுபட்ட தரப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்படுவதோடு, அவற்றின் நலன்கள் மொத்த தேசத்திற்கு கிடைத்தாலும் இதன் பொருட்டு பங்குபற்றுபவர்களை ஊக்குவிப்பதற்கு மர நடுகையின் மூலம் கிடைக்கும் நலன்களை இதற்காக பங்களிப்பு நல்கிய சகல தரப்பினர்களுக்கும் இடையில் பகிர்வது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. பொது இடங்களில் மர நடுகையின் மூலம் கிடைக்கப்பெறும் காய், இலை, பூ, மரம், எண்ணெய் போன்ற உற்பத்திகள் மர நடுகைக்கு பங்களிப்பு நல்கிய தரப்பினர்களுக்கு வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறையில் இல்லை. அதேபோன்று மர நடுகை செயற்பாடுகளை மிக பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக நிதி பெற்றுக்கொள்வதற்கு தனியார்துறை, அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு தேசிய மர நடுகை நிதியமொனறை தாபிக்கும் பொருத்தப்பாடும் இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த நோக்கங்களுக்காக உரிய ஏற்பாடுகளை உள்ளடக்கி "காடு வளர்ப்பு மற்றும் மரக்காப்புச் சட்டம்" என்னும் பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.