• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
விவசாயத்துறை நவீனமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம்
- பயன்பாடு குறைவான வளங்களை இலங்கையில் விவசாயத்துறை சார்பில் வினைத்திறன்மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்தி நாட்டின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, விவசாயிகளின் வருமானம் மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல், சந்தையினை ஒழுங்குறுத்துதல், ஏற்றுமதியினை குறியிலக்காகக் கொண்ட உற்பத்திகளை அதிகரித்தல், இளம் சமூகத்தினரை விவசாயத்தின்பால் ஈர்ப்பதன் மூலம் விவசாயம்சார் தொழில்முயற்சியாளர்களை உருவாக்குதல் மற்றும் தகவல் தொழிநுட்பத்தை விவசாயத்துறையில் பயன்படுத்துதல் போன்ற நோக்கங்களை வெற்றிகொள்வதற்கு விவசாயத்துறையை துரிதமாக நவீனமயப்படுத்த வேண்டியுள்ளது. விவசாயத்துறை நவீனமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரியதாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவையினால் அதன் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.

* 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த நடாக இலங்கையை கட்டியெழுப்பும் பணிக்கு விவசாயத்துறையின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் பொருட்டு துறைசார்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் தேசிய கொள்கை கட்டமைப்பொன்றைத் தயாரித்தல்.

* சனாதிபதி செயலகத்தின் கீழ் விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் செயலகமொன்றைத் தாபித்தல்.

* விவசாயத்துறை நவீனமயமாக்கல் பணிகளை பயனுள்ள விதத்திலும் நிலைபேறுடையதாகவும் அதேபோன்று சிறந்த ஒருங்கிணைப்புடனும் நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் "விவசாயத்துறை நவீனமயமாக்கல் சேவைகள் மற்றும் அறிவு சார்ந்த கேந்திரநிலையங்களை" தாபித்தல்

* உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கமநல அபிவிருத்தி சட்டம் அடங்கலாக ஏனைய உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்தல்.