• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
உள்ளூராட்சி அதிகாரசபை ​தேர்தல் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரசியல் உரிமையுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- 2023 உள்ளூராட்சி அதிகாரசபை ​தேர்தல் காலவரையரையின்றி பிற்போடப்பட்டதன் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழுவொன்றை நியமிப்பது பொருத்தமானதென தேர்தல் ஆணையாளர் நாயகத்தினால் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேர்தல் ஆணைக்குழுவின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த குழுவின் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

(i) தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த அதிகார பிரதேசத்திற்கு வௌியே அமைந்துள்ள சேவை நிலையமொன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதன் காரணமாக சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள அரசியல் உரிமையுள்ள அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் அது சம்பந்தமாக மேன்முறையீடு செய்வாறாயின் திணைக்களத் தலைவர்கள் அது தொடர்பில் பரிசீலனை செய்து, உரிய சேவை நிலையத்தில் அரசியல் நடவடிக்கைகளிலோ அல்லது அரசியல் பிரசார, மேம்பாட்டு நடவடிக்கைகளிலோ ஈடுபடாது கடமைகளை செய்வதாக குறித்த உத்தியோகத்தர்களிடமிருந்து சத்திய கடதாசியினை பெற்றுக் கொண்டதன் பின்னர், உத்தியோகத்தர்களின் நிரந்தர சேவை நிலையத்திற்கு கடமைகளை பொறுப்பேற்பதற்கு வசதியளித்தல்.

(ii) 2023‑04‑25 ஆம் திகதியிலிருந்து 2023‑05‑08 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியினை சம்பளத்துடனான லீவாக கருதி ஆரம்ப சம்பளத்தை செலுத்துதல்.

(iii) 2023 உள்ளூராட்சி அதிகாரசபை ​தேர்தல் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள உத்தியோகத்தர்களுக்கு 2023‑05‑08 ஆம் திகதியிடப்பட்டதும் 07/2023 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக சேவைக்கு சமூகமளிக்குமாறு பணிப்பு விடுத்தல்.

(iv) அதற்கிணங்க, அரசியல் உரிமையுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மேற்போந்த விடயங்களை உள்ளடக்கி அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையொன்றை வௌியிடுதல்.