• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
அரசாங்க துறை ஊழியர்களின் பிணக்குகளைத் தடுத்தல் மற்றும் பிணக்குகளைத் தீர்த்தல் என்பன பொருட்டு பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்துதல்
- அரசாங்க துறையில் நிலவும் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக தனியார் துறைக்கு சமமான பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்கள், ஆலோசனைகள், மத்தியஸ்தம் மற்றும் நடுத்தீர்ப்பு போன்ற எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு, பிணக்குகளைத் தடுத்தல் மற்றும் பிணக்குகளைத் தீர்த்தல் என்பன பொருட்டிலான பொறிமுறையொன்று தொடர்பிலான முன்னோடி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2020‑11‑16 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து துறையின் 04 சேவை நிலையங்களில் குறித்த முன்னோடி கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தொழிநுட்ப நிதி ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த முன்னோடி கருத்திட்டத்தின் கீழ் முன்னோடி சேவை நிலைய மன்றங்கள் தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த மன்றங்களின் செயற்பாடு காரணமாக உரிய தரப்பினர்களுக்கிடையில் ஒத்துழைப்பானது விருத்தியடைந்து பிணக்குகளைத் தவிர்த்துக் கொள்வதற்கும் தீர்த்துக் கொள்வதற்கும் அடிப்படையாக அமைந்துள்ளதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த முன்னோடி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எய்தப்பட்டுள்ள வெற்றியினை அடிப்படையாகக் கொண்டு, பின்வருமாறு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* அரசாங்க நிறுவனங்களில் சேவை நிலைய மன்றங்களைத் தாபித்தல்.

* சுகாதாரம், போக்குவரத்து, கப்பல் மற்றும் துறைமுகம், மின்சக்தி மற்றும் வலுசக்தி உட்பட ஏனைய துறைகள் சார்பில் தொழிற்சங்கங்களினதும் முகாமைத்துவத்தினதும் பிரதிநிதிகளைக் கொண்ட துறைசார் மன்றங்களைத் தாபித்தல்.

* தொழிற்சங்கங்கள், உரிய அமைச்சுக்கள் / துறைசார் சபைகள், தாபனப் பணிப்பாளர் அதிபதி, முகாமைத்துவ சேவைகள் திணைக்களம், தேசிய வரவுசெலவுத்திட்ட திணைக்களம் என்பவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட தேசிய கலந்துரையாடல் மன்றங்களைத் தாபித்தல்.

* மாகாண மட்டத்தில் 09 மாகாண மத்தியஸ்த சபைகளைத் தாபித்தல்.

* பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் தேசிய நடுத்தீர்ப்பு சேர்மமொன்றை தாபித்தல்.