• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலாத் தொழிலை மீளக் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படவேண்டிய குறுகியகால திறமுறைகளை நடைமுறைப்படுத்துதல்
- COVID தொற்று காரணமாக இழந்த தமது சுற்றுலா வர்த்தக பங்கினை மீண்டும் உரித்தாக்கிக் கொள்வதற்கு பெரும்பாலான ஆசிய சுற்றுலா பயண முடிவிடங்கள் தற்போது கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளதோடு, பல நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் அறவிடாது இலவசமாக விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆதலால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், COVID தொற்று மற்றும் அதன் பின்னர் உருவான கடும் பொருளாதார நெருக்கடி என்பவற்றின் மத்தியில் பின்னடைந்துள்ள இந்நாட்டு சுற்றுலா தொழிலின் மறுமலர்ச்சியின் பொருட்டு புதிய பல சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, எதிர்வரும் 03 வருட காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 05 மில்லியன் வரை அதிகரிக்கும் குறியிலக்குடன் மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினாலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினாலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்பு தொடர்பில் பின்வருமாறு நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

(i) 2024‑03‑31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி சார்பில் சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் யப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசாக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னோடி கருத்திட்டமொன்றாக உடனடியாக நடைமுறைப்படுத்துதல்.

(ii) வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு உலக மரபுரிமைகள் மற்றும் வரலாற்று அல்லது தொன்மை வாய்ந்த இடங்களுக்கு இலகுவாக செல்வதற்கு கட்டணம் அறவிடப்படும் இடங்கள் சகலவற்றுக்கும் ஒரே தடவையில் செலுத்தி கொள்வனவு செய்யும் அனுமதிப்பத்திர பொதியொன்றை விமான நிலையத்தில் அல்லது இணையவழியூடாக கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடுகளை செய்தல்.

(iii) இலங்கை புகையிரத சேவையின் சுற்றுலா பயண பெட்டிகளுக்குத் தேவையான அனுமதிப்பத்திர விற்பனையையும் இணையவழி மூலமோ அல்லது ஒரே தடவையின் செலுத்தி பெற்றுக் கொள்ளும் பொது அனுமதிப்பத்திரமொன்றாக விமான நிலையத்தில் கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடுகளை செய்தல்.