• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை உவர் நீர் இறால் வளர்ப்பிற்காக இரண்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
- இலங்கையில் மேற்கொள்ளப்படும் பிரதான வர்த்தக ரீதியிலான நீர்வாழ் உயிரின வளர்ப்பான உவர் நீர் இறால் வளர்ப்பின் மூலம் 2021 ஆம் ஆண்டில் 14,414 மெற்றிக்தொன் உற்பத்தி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, 2025 ஆம் ஆண்டளவில் இதனை 50,000 மெற்றிக்தொன் வரை அதிகரிப்பதனையும் அதன் மூலம் 65,500 மில்லியன் ரூபா அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்வதனையும் குறியிலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும், இந்நாட்டில் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கு பயன்படுத்தக் கூடிய காணியின் அளவு வரையறுக்கப்பட்ட நிலையில் உள்ளமையினால், வர்த்தக ரீதியிலான நீர்வாழ் உயிரின வளர்ப்பினை மேலும் விருத்தி செய்வது சவாலாகவுள்ளது. இச்சவாலுக்கு முகங்கொடுப்பதற்காக தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை வரையறுக்கப்பட்ட காணியில் மிகச்சிறந்த உற்பத்தியினை பெற்றுக் கொள்ளத்தக்க நவீன தொழிநுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கிணங்க, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 218 ஏக்கர் 30 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியானது குறுகிய காலத்தினுள் வளர்ப்பு சுழற்சி முறையினை பூர்த்தி செய்யும் 'வனமி' இன இறால் வளர்ப்பிற்கு பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. குறித்துரைக்கபட்ட காணியை, அரச பெறுகை செயன்முறையை பின்பற்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள W.S.R.Lowe & K.M.N.Aqua Services (Pvt.) Ltd., கம்பனிக்கும் Rainbo Foods (Pvt.) Ltd., கம்பனிக்கும் 109 ஏக்கர் 15 பேர்ச்சஸ் வீதம் அரசாங்க விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டு, 30 வருட காலத்திற்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதன் பொருட்டு கடற்றொழில் அமைச்சர் அவர்களினாலும் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.