• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பங்குடமை மற்றும் புதிய நிதியிடல் வழிமுறைகளின் மூலம் இலங்கையின் ஈர வலயத்தின் உயிரினப் பல்வகைமையை பாதுகாத்தல் மற்றும் நிலைபேறுடைய காணி முகாமைத்துவம் தொடர்பிலான கருத்திட்டம்
– ஈர வலய காணிகளுக்கு நிலவும் அதிக கேள்வி, வனாந்தரங்கள் துண்டாக்கப்படுதல், வனாந்தர அழிவு, காணிகளின் மதிப்பு குறைவடைதல், துரித அபிவிருத்தி செயற்பாடுகள், புதிய ஆக்கிரமிப்பு தாவரங்களின் பரம்பல், நிலையற்ற காணி பயன்பாடு, கமத்தொழில் போக்குகள், மழைவீழ்ச்சியின் மாற்றம், வெப்ப நிலை மற்றும் வரட்சியின் தாக்கம் போன்ற காரணங்கள் இந்த வலயங்களிலுள்ள உயிரினப் பல்வகைமை மற்றும் நீரேந்து பிரதேசங்களின் அழிவுக்கு, மண்ணின் உற்பத்தி திறனுக்கு அதேபோன்று தேயிலை மற்றும் இறப்பர் அடங்கலாக வருடாந்த மற்றும் பல்வருட பயிர்களின் பேண்தகு நிலைக்கு கடும் தாக்கத்தினைச் செலுத்தியுள்ளது. ஆதலால், தேயிலை மற்றும் இறப்பர் காணிகள் சார்ந்த உயர் உயிரினப் பல்வகைமையுடன் கூடிய சிறிய வனாந்தரங்களைப் பாதுகாப்பதற்கும் நிலைபேறுடைய காணி முகாமைத்துவத்திற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதன்பால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சுற்றாடல் அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் ஏனைய உரிய தரப்புகள் இணைந்து இதன் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள பங்குடமை மற்றும் புதிய நிதியிடல் வழிமுறைகளின் மூலம் இலங்கையின் ஈர வலயத்தின் உயிரினப் பல்வகைமையை பாதுகாத்தல் மற்றும் நிலைபேறுடைய காணி முகாமைத்துவம் தொடர்பிலான கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு உலகளாவிய சுற்றாடல் வசதிகள் மூலம் சுமார் 04 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொடையினை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் உடன்பாடு தெரிவிக்கப் பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய ஆறு (06) மாவட்டங்களில் அரசாங்க – தனியார் மற்றும் சமூக பங்குடமையின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள உத்தேச கருத்திட்டம் சார்பில் உரிய கொடையினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கும் சுற்றாடல் அமைச்சுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.