• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்திற்கு நிதியளித்தல்
- 2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் 2023 ஆண்டு சார்பில் 4,979 பில்லியன் ரூபா கொண்ட தேறிய கடன் தொகையினைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த வரையறையினை குறித்த இந்த ஆண்டினுள் கடன் மீள் செலுத்துகை, வட்டி செலுத்துகை மற்றும் அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு நிதியிடுதல் என்பவற்றுக்காக பயன்படுத்தவேண்டியுள்ளது. 4,979 பில்லியன் ரூபா கொண்ட குறித்த மொத்த தேறிய கடன் பெறுகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தோற்றுவாய்களின் மூலம் பெற்றுக் கொள்ளப்படுவதோடு, உள்நாட்டு தோற்றுவாய்களிலிருந்து 3,526 பில்லியன் ரூபாவும் வெளிநாட்டு தோற்றுவாய்களிலிருந்து 1,453 பில்லியன் ரூபாவும் பெற்றுக் கொள்வதற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு தோற்றுவாய்களின் கீழ் திறைசேரி முறிகள், திறைசேரி பிணைகள், வங்கி வெளிநாட்டு நாணய அலகுக் கடன்கள் மற்றும் இலங்கை அபிவிருத்திப் பிணைகள் மூலம் தேவையான கடன் பெற்றுக்கொள்ளப்படும். 2022 ஏப்ரல் மாதத்தில் இலங்கை அரசாங்கத்தினால் வெளிநாட்டு கடன் சேவைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கொள்கைக்கு இணங்கியொழுகி, 2023 ஆண்டின் ஆரம்ப 06 மாதங்களில் வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் சேவை செலுத்தல்கள் 2,609 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2,069 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு கடன் தவணைகளை மீள செலுத்துவதற்கும் 540 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வட்டியை செலுத்துவதற்குமாகும். வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டிய கடன் சேவைச் செலுத்தல்களில் 709 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் இலங்கை அபிவிருத்தி பிணை கடன் மற்றும் அதற்கான வட்டி 46 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களும் உள்ளடங்குகின்றது. இதற்கிணங்க, அதிகாரமளிக்கபட்ட கடன்பெறுகை எல்லைக்குள் தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திறைசேரி செயலாருக்கு அதிகாரத்தினைக் கையளிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.