• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய விருது வழங்கல் - 2023
- இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் பல்வேறு துறைகளில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டுமுகமாக தேசிய விருது வழங்கல் 1986 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 1995‑03‑20 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சனாதிபதிகளினால் இலங்கையர்களுக்கான ஸ்ரீலங்காபிமான்ய, தேசமான்ய, தேசபந்து, வித்யாஜோதி, கலாகீர்த்தி, ஸ்ரீலங்கா சிகாமணி, வித்யாநிதி, கலாசூரி, ஸ்ரீலங்கா திலகம், வீரபிரதாப போன்ற முறைசார்ந்த நடைமுறைகளுக்கு அமைவாக விருதுகள் வழங்கப்படுகின்றன. அதேபோன்று 1990‑09‑12 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக ஸ்ரீலங்கா ரஞ்சன, ஸ்ரீலங்கா ரத்ன மற்றும் ஸ்ரீலங்கா ரம்ய போன்ற விருதுகளும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதேபோன்று 2008‑02‑08 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக ஸ்ரீலங்கா மிதரவிபூசன விருது இலங்கை மக்களின்பால் வழங்கிய ஒத்துழைப்புக்களைப் பாராட்டி இலங்கையுடன் நல்லுறவுகளைப் பேணுகின்ற அரச தலைவர்களுக்கு வழங்கப்படுகின்றதோடு, இந்த விருது இலங்கையர் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதுகளின் வரிசையில் உயரிய விருதாக உள்ளது. தற்போது குறித்த தேசிய விருதுகளில் குறிப்பிடத்தக்க வெற்றிடங்கள் காணப்படுவதுடன், முறைசார்ந்த நடவடிக்கை முறையினைப் பின்பற்றி தேர்ந்தெடுக்கப்படும் தகைமையுடையவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. அத்துடன், குறித்த விருதுகளுக்கு மேலதிகமாக கலை, இலக்கியம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் போன்ற துறைகளின் மேம்பாட்டுக்காக ஆற்றிய சேவைகளைப் பாராட்டுவதற்காக விசேட கௌசல்யாபிமானி விருதினையும் தேசத்திற்கு வழங்கிய பெரும் அர்ப்பணிப்பினைப் பாராட்டுவதற்காக விசேட குடியரசு அபிமானி விருது இலங்கையர்களுக்கு வழங்குவதற்கும் இந்த இரண்டு விருதுகளையும் தேசிய விருதுகளின் வரிசையில் உயர் இடத்தினை வழங்குவதும் பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த வர்த்தமானி அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைமுறைகளுக்கு அமைவாக விண்ணப்பங்கள் கோரி விருது வழங்குவதற்கான தெரிவுகளை செய்வதற்கும் முறைசாரா வகையில் வேறு நிறுவனங்கள் மூலம் தேசிய விருது வழங்குவதைத் தடுப்பதற்குமான ஏற்பாடுகளை உள்ளடக்கி பாராளுமன்ற சட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்குமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.