• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கருத்திட்ட அலுவலகங்கள் மற்றும் கருத்திட்ட முகாமைத்துவ பிரிவுகள் ஆகியவற்றின் மீளாய்வுக் குழுவின் அறிக்கை
- பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக தாபிக்கப்பட்டுள்ள கருத்திட்ட அலுவலகங்கள் மற்றும் கருத்திட்ட முகாமைத்துவ பிரிவுகள் சார்பில் கணிசமான அளவு செலவினை ஏற்க வேண்டியுள்ளமை பற்றியும் குறித்த அலுவலகங்கள் மற்றும் பிரிவுகள் சார்பில் கணிசமான அளவு பதவியணியினர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளமை பற்றியும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அவற்றின் பணிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டுமென 2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் முன்மொழியப்பட்டது. குறித்த கருத்திட்ட அலுவலகங்கள் மற்றும் கருத்திட்ட முகாமைத்துவ பிரிவுகள் என்பற்றின் மூலம் எதிர்பார்த்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது பற்றியும் தொடர்ந்தும் அவற்றை பேணவேண்டுமா என்பது பற்றியும் மீளாய்வு செய்து சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவரான திரு.எச்.ரீ.கமல் பத்மசிறியின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினால் தற்போது நடாத்திச் செல்லப்படுகின்ற 55 கருத்திட்ட முகாமைத்துவ பிரிவுகளை மூடுவதும் மேலும் 32 கருத்திட்ட முகாமைத்துவ பிரிவுகளை இடைநிறுத்துவதும் 46 கருத்திட்ட முகாமைத்துவ பிரிவுகளை ஆகக்குறைந்த பதவியணியுடன் நடாத்திச் செல்வதும் பொருத்தமானதென சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்தக் குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.