• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் உள்ளீடுகளை இறக்குமதி செய்வது சம்பந்தமாக நிலவும் வரையறைகளை திருத்துதல்
- தற்போது நிலவும் அந்நிய செலாவணிப் பற்றாக்குறை, கடன் பத்திரங்களை திறப்பதற்குள்ள சிரமங்கள், அதேபோன்று முற்கொடுப்பனவு முறைக்குரிய பணச் செலுத்தல்களில் காணப்படுகின்ற மட்டுப்பாடுகள் காரணமாக கமத்தொழில் நடவடிக்கைகளுக்குத் தேவையான உள்ளீடுகளை உரிய காலப்பகுதியில் நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு இயலாமற் போயுள்ளமையினால் கமத்தொழில் கடும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது முக்கியமாக கமத்தொழில் உள்ளீடுகளை இறக்குமதி செய்யும்போது இத்தகைய இறக்குமதிகளுக்குரிய கட்டளைகள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு நிறுவனங்களிலிருந்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால், உரிய இறக்குமதிகள் காலதாமதமாவதுடன், மேலதிக செலவினை ஏற்கவேண்டி நேரிடுகின்றதென கமத்தொழில் உள்ளீடுகளை இறக்குமதி செய்கின்றவர்கள் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இதற்கிணங்க, எதிர்வரும் பெரும்போகத்தில் விவசாய நடவடிக்கைகளைத் தடையின்றி மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில், இனங்காணப்பட்ட விதைகள், கமத்தொழில் இரசாயனப் பொருட்கள் மற்றும் இரசாயன பசளை இறக்குமதியின்போது தற்போது உரியதாகும் முற்கொடுப்பனவு வரையறையான 50,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட பெறுமதியை 250,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்பு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.