• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிகளுக்காக நவீன கண்காணிப்பு முறையொன்றைத் தாபித்தல்
- இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் கண்காணிப்பு முறையானது 2008 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ளதோடு, தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் குறித்த முறையை நவீனமயப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியத்தின் கீழ் தற்போது செயற்படுத்தப்பட்டுவரும் நிதித்துறை நவீனமயப்படுத்தல் கருத்திட்டத்தின் ஊடாக இதற்குத் தேவையான நிதியினை ஏற்பாடு செய்துகொள்ளும் சாத்தியம் நிலவுகின்றது. இதற்கிணங்க, தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் கண்காணிப்பு முறையினைத் தாபித்த லண்டன் பங்கு பரிமாறல் கூட்டின் உறுப்புரிமையினைக் கொண்டுள்ள இலங்கையில் Millennium It Software (Pvt). Ltd. நிறுவனத்திடமிருந்து நேரடி பெறுகையொன்றாக பிரேரிப்பினைக் கோரி குறித்த காண்காணிப்பு முறையினை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.