• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதாரம் 2022 மற்றும் எதிர்கால நோக்கு
- 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டு 2022 சனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து செயற்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடையும் பொருட்டு இலங்கை பொருளாதாரத்தின் வௌிவாரி எதிர்கால நோக்கு சம்பந்தமான பின்வரும் தகவல்கள் விரிவாக நிதி அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்தின் பொருட்டு முன்வைக்கப்பட்டது.

* வௌிநாட்டு கடன் செலுத்துகை மற்றும் எதிர்பார்க்கப்படும் பண்டங்கள், சேவைகள் இறக்குமதி செலவு அடங்கலாக 2022 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து வௌிச்செல்லுமென மதிப்பிடப்பட்டுள்ள அந்நிய செலாவணி பற்றிய தகவல்கள்.

* ஏற்றுமதி வருமானம், சுற்றுலா கைத்தொழில் மூலமான வருமானம், புலம்பெயர் ஊழியர்களினால் செய்யப்படும் அனுப்பீடுகள், நேரடி வௌிநாட்டு முதலீடுகள் உட்பட 2022 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் அந்நிய செலாவணி ஓட்டம்.

* எதிர்பார்க்கப்படும் அந்நிய செலாவணி பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு உத்தேச குறுகிய மற்றும் நடுத்தவணைக்கால நடவடிக்கைகள்.

* நிலவும் பொருளாதார நிலைமையின் கீழ் பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரித்துச் செல்வதன் காரணமாக மக்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள பொருளாதார பிரச்சினைகளை குறைக்கும் பொருட்டு உத்தேச பின்வரும் நிவாரணங்கள் -

(i) அரசாங்க ஊழியர்களுக்கும் ஓய்வூதியகாரர்களுக்கும் 5,000/- ரூபா வீதமான மாதாந்த கொடுப்பனவொன்றை சனவரி மாதம் முதல் வழங்குதல்.

(ii) தனியார் துறை சேவை கொள்வோருடன் கலந்துரையாடி இந்த நிவாரணத்தை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

(iii) 3,500/- கொண்ட மாதாந்த கொடுப்பனவினை பெறுவதற்கு உரித்துடைய சமுர்த்தி பயனாளிகளுக்கு 1,000/- ரூபா கொண்ட மாதாந்த மேலதிக கொடுப்பனவொன்றை வழங்குவதற்கும். இந்த கொடுப்பனவினை ஏனைய சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்குதல்.

(iv) எதிர்வரும் போகத்தில் நெல் அறுவடை குறைந்தால் தற்போது நெல் கிலோவொன்றுக்கு செலுத்தப்படும் 50/- ரூபா கொண்ட உத்தரவாத விலைக்கு மேலதிகமாக நெல் கிலோவொன்றுக்கு 25/- ரூபாவினைக் கொண்ட மேலதிக நிதியினை செலுத்துதல்.

(v) சந்தை அரிசி விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தாத விதத்தில் இவ்வாறு செலுத்தப்படும் மேலதிக தொகையினை அரசாங்கத்தினால் ஏற்றல்.

(vi) தமது நுகர்வுக்குத் தேவையான மரக்கறி, பழங்கள் போன்றவற்றை பயிரிடுவதனை ஊக்குவிக்கும் பொருட்டு வீட்டுத் தோட்ட செய்கை நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் மற்றும் இதன் பொருட்டுத் தேவையான நிலத்தை பணபடுத்தல், விதைகளைப் பெற்றுக் கொள்ளல் போன்ற தேவைகளுக்கு காணியின் விஸ்தீரணத்திற்கு அமைவாக ஆகக்கூடுதலாக ஏக்கர் ஒன்று வரை 10,000/- ரூபா என்னும் உச்சத்திற்கு உட்பட்டு, ஊக்குவிப்பு கொடுப்பனவொன்றை வழங்குதல்.

(vii) தோட்ட தொழிலாளர் குடும்பமொன்றுக்கு ஒரு கிலோகிராம் 80/- ரூபா வீதம் 15 கிலோகிராம் கோதுமை மாவினை சலுகை விலையில் வழங்குதல்.

(viii) தேவையான சந்தர்ப்பங்களில் உள்நாட்டு விவசாயிகளையும் உற்பத்தியாளர்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்து சகல அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வரிகளிலிருந்து முழுமையாக விடுவித்தல்.

நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த பிரேரிப்புகளை உள்ளடக்கிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.