• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வடமத்திய பாரிய கால்வாய் கருத்திட்டத்தை துரிதப்படுத்துதல்
- ஆசிய அபிருத்தி வங்கியின் 10 வருடகால நிதி வசதியளித்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் "மகாவலி நீர் பாதுகாப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்" அரசாங்கத்தின் நடுத்தவணைக்கால அபிவிருத்தி அணுகலின் கீழ் நீர்ப்பாசன மற்றும் குடிநீர் துறையின் பிரதான முதலீடொன்றாக செயற்படுத்தப்படுகின்றது. 966 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட இந்த கருத்திட்டத்திற்கு முதலீடு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மாகாணங்களில் கடும் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு வடமத்திய பாரிய கால்வாய், வடமேல் மாகாண பாரிய கால்வாய், மினிப்பே பாரிய கால்வாய் மற்றும் மீகஹகிருல, மஹாகித்துல போன்ற நீர்த்தேக்க முறைமைகளினதும் நிர்மாணிப்பு பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிணங்க, நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் வடமத்திய பாரிய கால்வாய் கட்டம் 1 மற்றும் கட்டம் 2 நிர்மாணிப்பின் மூலம் மொரகஹகந்த, கலுகங்கை நீர்த்தேக்கங்களில் களஞ்சியப்படுத்தும் மேலதிக நீர் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இரு போகமும் பயிர் செய்வதற்கான சாத்தியமுள்ள 73,800 ஹெக்டயார் நீர்ப்பாசன காணி சார்பில் பயன்படுத்துவதற்கும் அதேபோன்று 250,000 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்திற்கு அமைவாக 06 வருடங்களில் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த உரிய நிர்மாணிப்பு பணிகள் 04 வருட காலத்திற்குள் அதாவது 2025 ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைவாக உரிய ஒப்பந்தத்தை திருத்தி குறித்த நிர்மாணிப்பினை துரிதப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.