• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் மாடறுப்பைத் தடை செய்தல்
- உள்நாட்டு கமத்தொழில் மற்றும் உள்நாட்டு பால் உற்பத்தி போன்றவற்றை அதிகரிப்பதற்கு மாடறுப்பைத் தடை செய்வதற்கும் அதற்குரிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளையும் அதேபோன்று மாடறுப்புக்கு உரியதாக உள்ளூராட்சி நிறுவனங்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள துணைச் சட்டங்களை திருத்துவதற்கும் 2020 செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, பின்வரும் சட்டங்கள் / கட்டளைச் சட்டங்களை திருத்துவதற்காக சட்டவரைநரினால் சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

* 272 ஆம் அத்தியாயமான 1893 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க கசாப்புக் கடைக்காரர் கட்டளைச் சட்டம் .

* 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டம் .

* 252 ஆம் அத்தியாயமான மாநகர சபை கட்டளைச் சட்டம்.

* 255 ஆம் அத்தியாயமான நகர சபை கட்டளைச் சட்டம்.

* 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டம்.

இந்த சட்டமூலங்கள் அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவானதென சட்டமா அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த சட்டமூலங்களை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினாலும் கமத்தொழில் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.