• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர் தேக்கிவைக்கும் ஆற்றலை விருத்தி செய்வதற்காக சிறிய / நடுத்தர அளவிலான குளங்களில் சேர்ந்துள்ள மணல், மண் மற்றும் சேதனப் பதார்த்தங்களை அகற்றுதல்
- கிராமிய கமத்தொழில் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக 5,000 கிராமிய நீர்ப்பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் என்பவற்றை துரிதமாக புனரமைக்கும் நிகழ்ச்சித்திட்ட மொன்று ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. பலகாலமாக மணல் தேங்கியிருத்தல், நீர் தாவரங்கள் மற்றும் களைகள் வளர்ந்திருத்தல் உட்பட அவை சிதைவடைந்திருத்தல் காரணமாக திரண்டு நிறைந்துள்ள குளங்களை தூர்வாரி இத்தகைய குளங்களின் நீர் தேக்கிவைக்கும் ஆற்றலை விருத்தி செய்ய வேண்டுமென்பது இந்த குளங்களின் மூலம் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பிரதான கோரிக்கையாகும். இதன் பொருட்டு இந்த குளங்களில் படிந்துள்ள சேற்றினை தூர்வார வேண்டுமென்பதோடு, இவ்வாறு தூர்வாரப்படும் சேறு உட்பட ஏனையவற்றை களிமண் கைத்தொழில், மண் செழிப்பாக்கல், சேதனப் பசளை உற்பத்தி மற்றும் வீதி அபிவிருத்தி போன்ற பணிகளின் போது மூலப்பொருட்களாக பயன்படுத்த முடியும். ஆதலால் இத்தகைய மூலப்பொருட்களை பயன்படுத்தும் தொழில்முயற்சியாளர்களுக்கு மட்டுப்பாடுகளுடன் இவற்றை தூர்வாருவதற்கு வசதியளிப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு செலவின்றி வருமானத்தினை பெற முடியுமென்பதோடு, உரிய குளங்களின் நீர் தேக்கிவைக்கும் ஆற்றலை விருத்தி செய்வதற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். இந்த நோக்கத்திற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் தொழிநுட்ப பதவியணி போதுமானதாக இல்லாமையினால் இதன் பொருட்டு தேசிய இயந்திர சாதனங்கள் நிறுவனம், அரசாங்க அபிவிருத்தி மற்றும் நிர்மாணிப்பு கூட்டுத்தாபனம், மத்திய பொறியியல் சேவைகள் (தனியார்) கம்பனி மற்றும் மகநெகும ஆகிய நிறுவனங்களின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் குளங்களிலுள்ள படிவுகளை அரசாங்கத்திற்கு சாதகமான விதத்திலும் உரிய நியமங்களுக்கு அமைவாகவும் தூர்வாருவதற்கு தனியார் துறையின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதற்கும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் எதிர்வரும் மூன்று (03) வருட காலப்பகுதியில் ஆண்டொன்றுக்கு 2,000 குளங்களை தூர்வாருவதற்கும் நீர் தேக்கிவைக்கும் ஆற்றலை விருத்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.