• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடமேல் பாரிய கால்வாய் மற்றும் தெதுருஓயா நீர்ப்பாசன அபிவிருத்தி கருத்திட்டங்களின் கீழான நிலப் பிரதேசங்களை மகாவலி விசேட பொருளாதார வலயமொன்றாக பிரகடனப்படுத்தல்
- மகாவலி ஆற்றுப்படுகையின் மேலதிக நீர் வடமேல், வடமத்திய, வடக்கு மாகாணங்களில் அமைந்துள்ள துணை ஆற்றுப் படுகைகள் சார்ந்து வசிக்கும் கிராமிய மக்களின் கமத்தொழில் பொருளாதார செயற்பாட்டிற்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துவதனையும் அதேபோன்று இந்தப் பிரதேசங்களின் குடிநீர் மற்றும் கைத்தொழில் நீர்த்தேவைகளை ஈடுசெய்வதனையும் குறியிலக்காகக் கொண்டு முன்னுரிமை கருத்திட்டமொன்றாக மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் நான்கு ஆண்டுகளினுள் 88.9 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வடமேல் பாரிய கால்வாய் மற்றும் 95.7 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வடமத்திய பாரிய கால்வாய் ஆகிய இரண்டு செயற்கை கால்வாய் முறைமைகளை நிர்மாணிப்பதற்கும் 07 புதிய நீர்த்தேக்கங்களின் மூலம் 1,500 கிராமியக் குளங்களை போஷிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஏற்கனவே தெதுருஓயாவிற்கு குறுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் வேலைகளும் அதன்கீழான நிர்மாணிப்புகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, இந்த கருத்திட்டத்தின் கீழ் 200 சிறிய குளங்களின் மூலம் 25,000 ஆயிரம் ஏக்கர் காணிகளுக்கு இரு போகத்திலும் பயிர் செய்வதற்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதற்கும் சுமார் 50,000 புதிய நுகர்வோருக்கு குடிநீர் வசதிகளை வழங்குவதற்கும் அதேபோன்று 1.5மெகாவொட் கொண்ட புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத்திட்டமொன்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும்கூட எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்போந்த இரண்டு கருத்திட்டங்களின் கீழ் குருநாகல், புத்தளம், அநுராதபுரம் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 26 பிரதேச செயலாளர் பிரிவுகளை தழுவும் வித்தில் குறைவான அபிவிருத்தி காணிகளை துரித மற்றும் ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி செயற்பாட்டின் மூலம் அபிவிருத்தி செய்வதற்கு இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த வலயம் சார்பில் உரிய சகல அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்புடன் கூட்டு முதலீட்டுத் திட்டமொன்றைத் தயாரித்து எதிர்வரும் மூன்று (03_ வருட காலத்திற்கு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 26 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளை தழுவும் வித்த்தில் 410 கிாம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்ட புவியியல் அதிகார பிரதேசத்தை 1979 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க இலங்கை மகாவலி அதிகாரசபை சட்டத்தின் கீழ் மகாவலி விசேட அதிகார பிரதேசமொன்றாக பிரகடனப்படுத்தி ஒன்றிணைந்த மகாவலி கிராமிய அபிவிருத்தி செயற்பாட்டின் கீழ் அபிவிருத்தி செய்யும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.