• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஏற்றுமதி நோக்கத்திற்கு கற்றாழையிலிருந்து மருந்துப் பொருட்களை தயாரிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக வரையறுக் கப்பட்ட அவுரா லங்கா ஹெர்பல்ஸ் தனியார் கம்பனிக்கு நீண்டகால குத்தகையின் அடிப்படையில் காணி வழங்குதல்
- வரையறுக்கப்பட்ட அவுரா லங்கா ஹெர்பல்ஸ் தனியார் கம்பனி அநுராதபுரம் மாவட்டத்தில் சேதன பயிர்ச் செய்கை முறையின் கீழ் ஏற்றுமதி நோக்கத்திற்கு கற்றாழையிலிருந்து மருந்துப் பொருட்களை தயாரிப்பதற்கான கைத்தொழிலொன்றை ஆரம்பிப்பதற்காக 'உலர் வலய கிராமிய பொருளாதார அபிவிருத்தி கற்றாழை கருத்திட்டம்' என்னும் கருத்திட்டப் பிரேரிப்பொன்றை முன்வைத்துள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் கற்றாழை தாவரத்தின் வேர், கிழங்கு, பசை மற்றும் தாழ் போன்ற பகுதிகளைப் பயன்படுத்தி உ யர் சக்தி மிக்க பானம், மருந்து வில்லை பூச்சு, வாய் வழியாக உள்இழுப்பதற்கான மருந்து மற்றும் தலையில் பூசுவதற்கான எண்ணெய் போன்ற உற்பத்திகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றது. கருத்திட்டத்தின் மொத்த முதலீடானது 783 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாவதோடு, ஆரம்ப முதலீடாக 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை இடுவதற்கு முதலீட்டாளர் திட்டமிட்டுள்ளார். இந்த கருத்திட்டத்தின் கீழ் கற்றாழை விதை உற்பத்திக்கான நாற்று மேடைகளை உருவாக்குவதற்கு இராஜாங்கன மற்றும் நொச்சியாகம பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள 2,000 ஏக்கர்கள் மற்றும் இந்த நாற்று மேடைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கன்றுகளைப் பாவித்து கற்றாழை செய்கைக்காக அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 102,000 ஏக்கர்களை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பொருட்டு கொடை பத்திரங்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்கள் மீது காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள குடும்பங்கள் மற்றும் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்காக அரசாங்க காணிகளைப் பயன்படுத்தி வரும் குடும்பங்களை பங்குபெறச் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த கருத்திட்டத்தின் கைத்தொழிற்சாலை மற்றும் செயற்பாட்டு அலுவலக மனையிடம் என்பவற்றை நிர்மாணித்து நடாத்திச் செல்வதற்கும் களஞ்சியம் மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும் அண்ணளவாக 66 ஏக்கர்களைக் கொண்ட காணியினை அரசாங்க காணி கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 30 வருட நீண்டகால குத்தகை அடிப்படையில் இந்த கம்பனிக்கு வழங்கும் பொருட்டு நிதி அமைச்சரினாலும் காணி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.