• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமனலவெவ குளக்கட்டை புனரமைத்தல்
- 120 மெகாவொட் ஆற்றல் கொண்ட சமனலவெவ மின்நிலைய கருத்திட்டத்தின் நிர்மாணிப்பு பணிகள் 1986 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு, இந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் பணியானது 1992 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தில் நீர் கசிவு உள்ளதென குறித்த ஆண்டிலேயே கண்டறியப்பட்டதோடு, இது சம்பந்தமாக ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலு இதுவரை நீர் கசிவினை திட்டவட்டமாக கண்டறிய முடியாமற் போயுள்ளது. இந்த நீர் கசிவு காரணமாக நீர்த்தேக்கத்தின் கொள்ளளவானது 288 மில்லியன் கனமீற்றர்களாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால் சமனலவெவ மின்நிலையத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருடாந்த மின் பிறப்பாக்கல் ஆற்றலான 405 கிகாவொட் மணித்தியாலமானது சுமார் 70 கிகாவொட் மணித்தியாலங்களால் குறைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் வலது கரை பிரதேசமானது கூடுதலான சேதத்திற்கு உள்ளாகி நீர் கசியக்கூடிய துளைகளுடனான சுண்ணாம்பு படிவுள்ளதென கண்டறியப்பட்டுள்ளதோடு, நீர் கசியும் வழியானது மேலும் பெரிதாகி அனர்த்த நிலை உருவாவதற்கு இடமுள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இதற்கு முன்னர் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி ஆராய்ந்து நீர்த்தேக்கத்திலுள்ள நீரை முழுமையாக அப்புறப்படுத்தி பூரண பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர், நீர் கசியும் இடங்களை பொருத்தமான மூலப்பொருட்களைக் கொண்டு அடைப்பதற்கு இலங்கை மின்சார சபையினால் முன்வைப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைபடுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.