• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரித்தல்
- 2022-2024 நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரிக்கும் போது பின்பற்றப்படவுள்ள பின்வரும் நடவடிக்கைகள் நிதி அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இதன் பொருட்டு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

(அ) அடைவதற்கு எதிர்பார்க்கப்படும் பேரினப் பொருளியல் குறியிலக்குகள் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுபேறாக)

* அரச வருமானம் - 13.0
* அரச செலவுகள் - 20.6
* வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை - -7.5
* மத்திய அரசாங்கத்தின் கடன் - 95.0
* பொருளாதார வளர்ச்சி வீதம் - 6.0

இந்த இலக்குகளை பூர்த்தி செய்வதற்கு 2022 ஆம் ஆண்டில் நிலையான நாணயமாற்று வீதத்தை பேணுவதற்கும் பணவீக்கத்தை 5% என்னும் நிலையான பெறுமதியில் பேணுவதற்கும் வேலையின்மை வீதத்தை 4% இற்கு குறைவான மட்டத்தில் பேணுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

(ஆ) COVID - 19 இற்கு எதிரான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பலப்படுத்தி பொது சுகாதாரத்தினை பாதுகாக்கும் அதேநேரம் நாட்டையும் திறந்து வைத்திருத்தல்.

(இ) டிஜிட்டல் தொழிநுட்பத்தை அரசாங்க சேவைகளை வழங்குவதற்காக பயன்படுத்துதல், COVID - 19 இனால் பாதிக்கப்பட்ட துறைகளுக்குத் தேவையான சலுகைகளையும் வசதிகளையும் ஏற்பாடு செய்தல், இறக்குமதி பதிலீடுகளை விரிவுப்படுத்துதலும் மேம்படுத்துதலும், ஏற்றுமதி சார்ந்த துறைகளுக்கு தனியார் துறையின் முதலீடுகளை ஊக்குவித்தல், முதலீட்டிற்கு சாதகமான சூழலை உருவாக்குவதன் மூலம் நேரடி வௌிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல், அரசாங்க வருமானங்களை விரிவுப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலவளங்களின்பால் கவனம் செலுத்துதல் போன்ற விடயங்களுக்கு விசேட முன்னுரிமை வழங்குதல்.

(ஈ) தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கருத்திட்டங்கள் மற்றும் பணிகள் போன்றவைத் தவிர, புதிய நிர்மாணிப்புகள், அலுவலகங்களை விரிவுப்படுத்துதல், அலுவலக தளபாடங்களையும் உபகரணங்களையும் புதிதாகக் கொள்வனவு செய்தல், புதிதாக ஆட்சேர்ப்பு செய்தல், அத்தியாவசிய பாவனைக்கான வாகனங்கள் தவில புதிய வாகனங்களை கொள்வனவு செய்தல் போன்ற பணிகளை பொருளாதாரம் சீராகும் வரை ஊக்கப்படுத்தாதிருத்தல்.

(உ) 2022 ஆம் ஆண்டில் அனைத்து அரசாங்க நிறுவனங்களும் தமது பணிகளின் ஊடாக வருமானத்தை ஈட்டும் புதிய வழிகளின்பால் கவனம் செலுத்துதல்.