• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிஸ் உடன்படிக்கைக்குரியதாக "தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை" ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைப்பு சமவாயத்திற்கு சமர்ப்பித்தல்
- இலங்கை 1993 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைப்பு சமவாயத்தின் தரப்பொன்றாகச் செயற்பட்டு வருகின்றது. இதற்கிணங்க இலங்கை 2016 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்று பாரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதோடு, இதே ஆண்டின் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று இந்த உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கமளித்தது. புவி வெப்பமடைதல் அதிகரித்தலை கைத்தொழில் காலக்கட்டத்திற்கு முன்பிருந்த மட்டத்துடன் ஒப்பீட்டளவில் 02 பாகை செல்சியசை விட குறைவாக பேணுதல், அதனை 1.5 பாகை செல்சியஸ் மட்டத்தில் பேணுவதற்கு எடுக்கக்கூடிய சகல முயற்சிகளையும் எடுத்தல் பாரிஸ் உடன்படிக்கையின் முக்கிய நோக்கமாகும். இந்த நோக்கங்களை அடைவதற்காக உரிய தரப்பினர்களினால் நிறைவேற்றப்படும் செயற்பாடுகள் "தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்" என அழைக்கப்படும்.

இதற்கிணங்க, 2020 - 2030 காலப்பகுதிக்குள் இலங்கையானது நடைமுறைப்படுத்துவதற்கு இனங்காணப்பட்ட முதலாவது "தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்" அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைப்பு சமவாயத்திற்கு 2016 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதான 14 துறைகளின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பங்களிப்புகள் 05 வருடங்களுக்கு ஒரு தடவை இற்றைப்படுத்தப்பட்டு குறியிலக்கு ரீதியில் தயாரித்து மீண்டும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். 2020 திசெம்பர் மாதத்தில் நடாத்தப்படவிருந்த தரப்பினர்களின் 26 ஆவது கூட்டத் தொடரில் இந்த இற்றைப்படுத்தப்பட்ட பங்களிப்புகள் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும் COVID தொற்றுநிலமை காரணமாக இந்தக் கூட்டத் தொடரானது 2021 நவெம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய துறைகள் சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்புடன் அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைக்கு அமைவாக மீண்டும் இற்றைப்படுத்தப்பட்டுள்ள "தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை" ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைப்பு சமவாயத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் இந்த பங்களிப்புகள் வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் செயற்படுத்தப்படுகின்றதா என்பது பற்றி மேற்பார்வை செய்வதற்கு தேசிய வழிப்படுத்தல் குழுவொன்றை தாபிப்பதற்குமாக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.