• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் வீட்டிலிருந்தவாறு செயற்பாடுகள் மூலமாக பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளை பேணல்
- COVID - 19 தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் 'e-தக்ஷலாவ', 'குரு கெதர' தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சித்திட்டங்கள், தேசிய கல்வி நிறுவனத்தின் யூ ரியுப் அலைவரிசை மற்றும் மாகாண மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் இணைய வழி பாடங்கள் போன்ற மாற்று வழிகள் மூலம் மாணவர்களுக்கு கல்வியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயினும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் ஏனைய சிரேட்ட உத்தியோகத்தர்களை முழுமையாக பயன்படுத்துதல், கற்பித்தல் செயற்பாடுகளில் பொதுவான நியமங்களை பேணுதல், மாணவர்களின் பங்களிப்பு மட்டத்தை கணக்கெடுத்தல் மற்றும் கற்றல் மதிப்பிடுதல் சம்பந்தமான நடைமுறைப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஆதலால் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வாக சுகாதாரச் சட்டங்கள் மற்றும் வழிகாட்டல்களைப் பின்பற்றி கல்வித் துறையிலுள்ள சகல நிறுவனங்களையும் மனித வளங்களையும் ஆகக் கூடிய விதத்தில் பயன்படுத்தி வீட்டிலிருந்தவாறு செயற்பாடுகள் மூலமாக பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளைப் பேணல் என்னும் பெயரில் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ள நிகழ்சசித்திட்டத்தினை 2021 ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* ஒவ்வொரு தரங்கள் சார்பிலும் எதிர்பார்க்கப்படும் கற்றல் பெறுபேற்றுடன் செயற்பாடுகளை தரப்படுத்தலும் ஒன்றிணைத்தலும்.

* ஆசிரியர்களினால் செயற்பாடுகளை ஒழுங்குறுத்துதலும் மேற்பார்வை செய்தலும்.

* ஆசிரியர்களினால் வாரந்தம் மாணவர்களின் செயலாற்றுகையை மதிப்பிட்டு இது தொடர்பிலான அறிக்கைகளைப் பேணுதல்.

* பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களினால் பெற்றோர்களையும் மாணவர்களையும் இணைத்து வீட்டிலிருந்தவாறே கற்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்.

* ஆசிரிய ஆலோசகர்களினால் ஆசிரியர்களின் செயலாற்றுகையை மேற்பார்வை செய்தலும் ஒழுங்குறுத்துதலும்.

* உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தை தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் வலய மட்டத்திலும் செயற்படுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்குமாக சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுக்களை நியமித்தல்.