• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- COVID - 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள சில நிறுவனங்களின் ஊழியர்களின் தொழிலை இல்லாதொழிக்காது பேணுவதற்காக நிவாரணம் வழங்கும் நோக்கில் தொழில் கொள்வோர், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களைக் கொண்ட செயலணியின் மூலம் முன்வைக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சகல ஊழியர்களுக்கும் சேவை புரிவதற்கு இயலுமாகும் வகையில் சமவாய்ப்பு வழங்குதல், ஊழியர்கள் வீடுகளில் தங்கியிருப்பின் இறுதியாக செலுத்தப்பட்ட முழுச் சம்பளத்தின் 50% அல்லது 14,500/- என்னும் இரண்டில் கூடிய தொகையை வழங்குதல் மற்றும் இந்த சம்பளத்திற்கு தொழில் கொள்வோர்களினால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கும் பங்களிப்பு தொகையினைச் செலுத்துதல் போன்ற நிவாரணங்கள் 2021 யூன் மாதம் இறுதி வரை செயற்படுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் சர்வதேச விமான பயணங்களுக்கு வரையறை விதிக்கப்பட்டுள்ளமையினால் முக்கியமாக நாட்டில் சுற்றுலாத் தொழிலை வழமையானவாறு நடாத்திச் செல்வதற்கு இயலாமல் உள்ளதோடு இந்த துறையில் கடும் பாதிப்புக்கு உட்பட்டுள்ள நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மேற்போந்த நிவாரணங்களை 2021 யூலை மாதத்திலிருந்து 2021 திசெம்பர் மாதம் இறுதி வரை தொடர்ந்தும் நடைமுறைபடுத்தும் பொருட்டு தொழில் அமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.